நடிகர் விவேக் காலமானார்

0
147

மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் (59)சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

நடிகர் விவேக் 1987ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கொமடி நடிகராக நடித்து மக்களின் மனதில் ‘சின்ன கலைவாணர்’ என்ற பட்டத்துடன் வலம் வந்தார்.

மக்களிடத்தில் குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் இடத்திலும், சாதாரண ஏழை எளிய மக்களிடத்திலும் குடிகொண்டிருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தன்னுடைய திரைப்படங்களில் கருத்துகளை தெரிவித்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருந்தார். அவர் கடைசியாக கடந்த ஆண்டில் வெளியான ‘தாராள பிரபு’ என்ற படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்.

அவருடைய கலைச்சேவையை பாராட்டி இந்திய அரசாங்கம் ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரும், மாணவர்களின் பிரியத்துக்குரிய தலைவருமான மறைந்த அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக, அவருடைய பெயரிலேயே லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, பசுமையான சூழலை  ஏற்படுத்தும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தார்.

அண்மையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த தருணத்தில், வீட்டில் பியானோ என்ற இசைக் கருவியை இசைக்கக் கற்றுக் கொண்டு, அதனை காணொளி மூலமாக பதிவு செய்து, அதனை இளையராஜா இசைஞானி இளையராஜாவிடம் காண்பித்து பாராட்டைப் பெற்றிருந்தார்.

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அது தொடர்பான விழிப்புணர்வு காணொளியையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,’ அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், நேற்று முன்தினம் அவர் செலுத்திக்கொண்ட தடுப்பூசி காரணமல்ல’ என விளக்கம் அளித்துவிட்டு, தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பாக அவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4. 35 மணியளவில் உயிரிழந்தார்.

அவருடைய பூத உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலை 7 மணி அளவிலிருந்து இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது நண்பர்களும் உறவினர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் விவேக்கின் பூத உடலுக்கு திரையுலகினர் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.