மக்ஸ்வெல் – வில்லியர்ஸ் அதிரடி! பெங்களூர் ‘ஹட்ரிக்’ வெற்றி

0
167

மக்ஸ்வெல் – டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தாவை 38 ஓட்டங்களால் வென்று ஹட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது பெங்களூர் அணி.

ஐ.பி.எல். இருபது – 20 தொடரில் நேற்று பகல் நடந்த 10ஆவது போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணிகள் மோதின.

சென்னையில் நடந்த இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அணித் தலைவர் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தனர். இரண்டாவது ஓவரிலேயே இந்த இணையை பிரித்து அனுப்பினார் வருண். கோலி 5 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்தார். பறந்து வந்த பந்தை அபாரமான பிடியெடுத்த திரிபாதி கோலியை ஆட்டமிழக்கச் செய்தார்.

அடுத்து வந்த ராஜத் பரிதார் இரு பந்துகளே தாக்குப்பிடித்தார். அவரை வருண், போல்ட் அவுட் ஆக்கினார். எனினும் அடுத்து வந்த கிளென் மக்ஸ்வெல், விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் விதமாக பொறுமை காத்து ஆடினார்.

நிலைத்த இணை, சிறப்பான இணைப்பாட்டத்தை ஏற்படுத்தியது. 3ஆவது விக்கெட்டுக்காக 86 ஓட்டங்களை எடுத்தபோது, படிக்கல் 25 ஓட்டங்களுடன் பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் நின்று அதிரடி காட்டிய மக்ஸ்வெல்லுடன் இணைந்தார் அதிரடி வீரரான ஏபி டி வில்லியர்ஸ். இருவரும் சிறப்பான இணைப்பாட்டத்தை மீண்டும் ஏற்படுத்தினர்.

இருவரும் மாறிமாறி அடித்த சிக்ஸர், பௌண்ட்ரிகளால் பெங்களூரின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில், 49 பந்துகளில் 9 பௌண்ட்ரிகள், 3 சிக்சர்களை விளாசி 78 ஓட்டங்களை குவித்த மக்ஸ்வெல் கம்மின்ஸின் பந்தில் வெளியேறினார்.

ஆனால், ஏபி டி வில்லியர்ஸ் மறுமுனையில் தனது அதிரடியைத் தொடர் பெங்களூர் அணி 200 ஓட்டங்களைத் தொட்டது.

20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்த அந்த அணி 204 ஓட்டங்களை குவித்தது.

வில்லியர்ஸ் 9 பௌண்ட்ரிகள், 3 சிக்ஸர்களை பறக்க விட்டு, 34 பந்துகளில் 76 ஓட்டங்களுடனும், ஜமைசன் 4 பந்துகளில் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தாவின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களையும், பட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

205 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடியது கொல்கத்தா அணி. நிதிஷ் ராணா – சப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. சற்றுப் பெரிய இலக்கு என்பதால் ஆரம்பம் முதலே அடித்தாட ஆரம்பித்தனர்.

சப்மன் கில் 2 பௌண்ட்ரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 9ஆவது பந்தில் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ராணா சற்றுப் பொறுமை காத்தார். திரிபாதி வந்த பின்னர் ராணாவுக்கு பந்தை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் பெரிதாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெறுமையாக 20 பந்துகளை எதிர்கொண்டு 5 பௌண்ட்ரிகளை விரட்டிய திரிபாதி 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 2 பௌண்ட்ரிகள், ஒரு பௌண்ட்ரியுடன் 18 ஓட்டங்களை எடுத்த ராணாவும் ஆட்டமிழந்தார்.

வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முனைந்ததால், கொல்கத்தா அணி விக்கெட்களை சடுதியாக இழந்து தவிக்க ஆரம்பித்தது. இதனால், அணித் தலைவர் இயன் மோர்கன் பொறுமை காத்தார். பந்துகளை அவர் பார்த்து பார்த்து அடிக்க, மறுமைனயில் தினேஷ் கார்த்திக் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் அடுத்து வந்த சகீப் அல் ஹசனும் பொறுமை காத்து ஆடினார். இதனால், விக்கெட் வீழ்ச்சி சற்றுத் தவிர்க்கப்பட்டாலும், அணியின் ஓட்ட எண்ணிக்கை மிக மந்தமாகவே இருந்தது. இந்நிலையில் 29 ஓட்டங்களுடன் இயன் மோர்கன் ஆட்டமிழக்க, களம் புகுந்தார் அந்ரே ரஷல்.

4 ஓவர்களில் 79 ஓட்டங்கள் என்ற நிலையில் இருவரும் சற்று நிதானித்து ஆடினர். 17ஆவது ஓவரின் முதல் 4 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பௌண்ட்ரிகள் என விரட்டி 18 ஓட்டங்களைக் குவித்து பெங்களூருக்கு நெருக்கடி கொடுத்தார் ரஷல்.

18 ஓவரில் ஒரு சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் சகீப் அல்ஹசன் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸூம் 6 ஓட்டங்களுடனே வெளியேற, கொல்கத்தா அணி தவித்தது. ரஷல் அதிரடி காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், 19ஆவது ஓவரில் ஒரேயோர் ஓட்டத்தையே எடுத்தார். இதனால், பெங்களூரின் வெற்றி உறுதியானது.

20ஆவது ஓவரின் முதல் பந்தில் ரஷல் ஆட்டமிழந்தார். 9ஆவது விக்கெட்டுக்காக இணைந்த ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 166 ஓட்டங்களையே எடுத்திருந்தது. இதனால், 38 ஓட்டங்களால் அந்த அணி தோல்வியை தழுவியது.

பெங்களூரின் பந்துவீச்சில், ஜமைசன் 3 விக்கெட்கள், சாகல், பட்டேல் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவானார்.