உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் விசேட பிரார்த்தனை மற்றும் வேறு மத நிகழ்வுகளுக்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு பொலிஸ் தலைமையகத்தினால் விசேட அறிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர்கள், பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, நினைவேந்தல் இடம்பெறும் தேவாலயங்களில் பாதிரியார்கள், மதகுருமார்கள் மற்றும் மதத் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி தேவையான அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் வழங்கப்படும் பாதுகாப்பு சிரேஷ்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.