புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டக் குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று புத்தளம் தலைமையகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கல்அடிய சிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த 33, 23 வயதுடைய இருவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் உட்பட அவரது சகாக்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புத்தர் சிலையொன்றை அமைப்பதற்காக மணலைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இச்சம்பவத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
எனினும் தாக்குதலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பிரதேச சபை உறுப்பினர், நேற்று (8) முன்தினம் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவர் உட்பட குழுவொன்று தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு சேதம் விளைவித்துச் சென்றுள்ளனர் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் தனது வீட்டைத் தாக்குவதற்கு வந்தபோதே அவ்விருவம் காயமடைந்துச் சென்றுள்ளனர் என்றும் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.