களுத்துறை தெற்குப் பகுதியில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹின்னடியாங்கல பகுதியில் இன்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
களுத்துறை மற்றும் பயாகல பகுதியைச் சேர்ந்த 22-36 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட ஏழு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்கிடமான வான் மற்றும் கார் ஒன்றை அவதானித்துள்ள விஷேட அதிரடிப்படையினர், அதனைச் சோதனை செய்ததுடன்,அதிலிருந்து சட்டவிரோத ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய, கைக்குண்டு ஒன்றும், 4 வாள்களும் மற்றும் 6 கத்திகளையும் மீட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இந்நபர்கள் அந்த உத்தரவை மீறி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதால் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கமையவும், தண்டனை சட்டக்கோவை, சட்டவிரோதமான ஆயுதங்கள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆயுதங்களை வைத்திருந்தமை ஆகிய சட்டவிதிகளுக்கமைய இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை,இவர்கள் இந்த ஆயுதங்களை கொண்டு ஏற்கனவே ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனரா? அல்லது திட்டமிட்டுள்ளார்களா? என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸாரும், பொலிஸ் விஷேட அதிரடிப்படையிரும் முன்னெடுத்து வருகின்றனர்.