ஒமைக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “இந்தக் காலகட்டத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொற்று, முன்பை விட வித்தியாசமானது. ஒமைக்ரான் அதிகம் தொற்றும் தன்மை கொண்டது. இது கடினமாக இருக்கப் போகிறது. கோவிட் மாறும்போது நாமும் மாற வேண்டியுள்ளது. ஆனால், இந்த முறை ஒமைக்ரான் காரணமாக கரோனா பரவல் ஏற்பட்டாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை.
கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்க உள்ளோம். கடைகள் திறப்பு, உள்ளூர் போக்குவரத்து வழக்கம் போல் இருக்கும். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் 93வீதத்துக்கும் மேலான மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 52வீதத்துக்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலக அளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் தரவுகள் ஹோக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை இலக்கு வைக்கும் ஹேக்கர்கள், அதிகம் பாதிக்கப்படக் கூடிய ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரின் தகவல்களை திருடியுள்ளனர். உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போன்றோருக்காக மனிதாபிமான உதவிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வழங்கி வருகிறது.
அந்த அமைப்பு, மிகவும் நேர்த்தியாக நடந்த சைபர் தாக்குதலால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெளிவற்று உள்ளது. சுமார் ஐந்து லட்சத்து 15 ஆயிரம் பேரின் தனி நபர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
அந்த தரவுகள், உலக அளவில் இயங்கி வரும் 60க்கும் அதிகமான செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை தேசிய சங்கங்கள் மூலம் சர்வதேச அமைப்புக்கு வந்தவை.
ஜெனீவாவில் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு, வியன்னாவில் உள்ள வெளி நிறுவன சர்வரில் இந்த தரவுகளை சேமித்து வந்ததாகவும் அதையே ஹேக்கர்கள் இலக்கு வைத்ததாகவும் கூறியுள்ளது.
அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் மார்டினி, இந்த திருட்டு சம்பவம், பாதிக்கப்பட்ட மக்களை பேராபத்துக்கு தள்ளியிருக்கிறது என்று தெரிவித்தார். அவர், “இதில் தொடர்புடையவர்கள் ஒன்றை சரியாக செய்யுங்கள் – யாரிடமும் தரவுகளை பகிராதீர்கள், விற்காதீர்கள், கசியவோ அவற்றை பயன்படுத்தவோ செய்யாதீர்கள்,” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.