இலங்கைக்கு தெற்காக 737 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் சுமார் 3ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு சேவை, கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 330 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 11 பேர் இரண்டு கப்பல்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் துபாயில் உள்ளதோடு அவர் அங்கிருந்து,
வர்த்தகத்திற்காக போதைப் பொருளை அனுப்பியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் சுமார் 3ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் மீட்கப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.