26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாம் இலங்கையர் என்பது ஒவ்வொரு இனத்தவர்களின் விருப்புக்குரிய அடையாளமாக இருக்க வேண்டும்!

நாம் இலங்கையர் என்பது ஒவ்வொரு இனத்தினதும் விருப்பத்திற்குரிய அடையாளமாக இருக்க வேண்டும் என ஒரு நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சமத்துவக் கட்சி அனுப்பியுள்ள முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமவத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமாரால், இந்த முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாடு ஒரே சட்டம் செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, சமத்துவக் கட்சியின் முன்மொழிவில்.
‘வரலாற்றின் பல்வேறு தருணங்களில் குறிப்பாக சுதந்திரத்துக்கு பின்னான வருடங்களில், அரசியல் மத இன முரண்பாடுகள் தீவில் வாழும்
சமூகங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டு இருந்தாலும், இலங்கையின் ஆன்மா அதன் இன,பன்மைத்துவத்தில் தான் உயிர் வாழ்கின்றது என்பதில் சமத்துவ கட்சி ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.
நீண்ட ஆயுத மோதல்களின் விளைவாக, இங்கே வசிக்கக்கூடிய ஒவ்வொரு இனக்குழுவும் சந்தித்திருந்த வடுக்களை ஒரு சமுதாயம் ஏனைய சமுதாயங்களை அதன் இயங்கியல் செல்நெறியை மதித்து ஏற்றுக்கொள்வதன் ஊடாக மாத்திரமே ஆற்றிக்கொள்ள முடியும் என்பதிலும் சமத்துவ கட்சி மிகுந்த புரிதலுடன் இருக்கிறது.
‘நாம் இலங்கையர்’ என்ற ஒற்றை வரியில் தொனிக்கக்கூடிய உட்பொருள் வெறுமனே ஒரு சமுதாயத்தின் குரலாக இல்லாமல் பல
நூற்றாண்டுகளாக பலமான ஒருங்கிணைப்பில் வாழும் ஒவ்வொரு இனத்தினதும் விருப்பத்திற்குரிய அடையாளமாக இருத்தல் வேண்டும் என்பதிலும் நாங்கள் பற்றுறுதியுடன் இருக்கிறோம்;. அதனை நோக்கியே எங்களது கட்சியின் செயற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கிறது.
தேசத்தின் ஆன்மாவாக இருக்கக்கூடிய இன பன்மைத்துவம் ஒவ்வொரு இனக்குழுவும் தங்களது சுய அடையாளங்களை மொழி மற்றும் பண்பாட்டு விழுமியங்களை ஏனையவர் மேல் திணிக்காமல் மதித்து நடந்து கொள்ளும் போதெல்லாம் வலிமை பெறுகிறது.
புழக்கத்தில் இருக்கின்ற எந்தவொரு சட்ட ஒழுங்கும் அதனதன் வாழ்வியல் முறைகளில் நீண்ட நெடுங்காலம் பரீட்சிக்கப்பெற்று அங்கீகரிக்கப்பட்ட நன்னெறிகளின் தொகுப்பு என்ற எடுகோளின் அடிப்படையில் இனங்களுக்கான பிரத்தியேக சட்டங்கள் தனித்துவம் மிக்கவை.
குறுகிய நில எல்லைகளுக்குள் அத்தகைய சட்டங்கள் இலங்கை தீவினுள் பிரயோகிக்கப்பட்டு வந்தாலும், அதன் அறம் சார்ந்த பண்புகள் வலிமையானவை. சமகால அரசாங்கம் உத்தேசித்துள்ள ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற எண்ணக்கருவில் உள்ள தெளிவின்மை, நடைமுறையில் உள்ள இனங்களுக்கான பிரத்தியேக சட்டங்களை பலவீனமாக்கும் என்ற அச்சம் எங்களுக்கும் உண்டு.
தீவினை நாநூறு வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்த அந்நியர்களும் ஏற்றுக்கொண்டிருந்த கண்டியர் சட்டம், தேச வழமை மற்றும் இஸ்லாமிய சட்டம் என்பவை மேலே கூறப்பட்ட ‘ஒரே சட்டம்’ என்ற பொறிமுறையில் எவ்வாறு கௌரவிக்கப்படும் என்பது இன்றுவரை விளக்கப்படவில்லை.
குறுகிய காலத்தில் புதிதாக உருவாக்க எத்தனிக்கப்படும் சட்டம் ஒன்று பல தலைமுறைகளாக வழக்கத்தில் உள்ள சட்ட அமைப்புகளை வறிதாக்குவது முரண்நகை என்பதோடு, எம்மைப்போன்ற பலர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இன-பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வு என்பதை பலவீனமாக்கும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்.
இலங்கை திருநாட்டில் வழக்கத்தில் உள்ள இனங்களுக்கான பிரத்தியேக சட்டங்களில் காணப்படும் தற்காலத்துக்கு ஒவ்வாத பொருத்தமில்லாத சரத்துக்களை அந்தந்த இன குழுக்களின் அறிவார்ந்த பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, புதிதாக வரைவதன் மூலம் பண்பாட்டு பாலமாக இருக்கக்கூடிய இனங்களின் சட்டங்களை அடுத்து வரும் சந்ததிக்கு கொண்டு சேர்க்கலாம் என்பது எங்களது நிலைப்பாடாகவும் வேண்டுகையாகவும் இருக்கிறது.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles