உலகளவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஏழு நாட்களில் கொரோனாவால் 2 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இம்மாதம் 17 – 23ம் தேதி வரை கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: உலகளவில் ஜன., 17 – 23ம் தேதி வரையிலான ஏழு நாட்களில் புதிதாக 2 கோடியே 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தோன்றிய பின் முதன் முறையாக தற்போது தான் ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வகையை விட ‘ஒமைக்ரான்’ வேகமாக பரவுவது தான் காரணம்.இதே வாரத்தில் 50 ஆயிரம் பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
ஜன., 23 வரை ஒட்டு மொத்தமாக உலகளவில் 34 கோடியே 60 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 55 லட்சம் பேர் இறந்துள்ளனர்.மதிப்பீட்டு வாரத்தில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 42 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பு பிரான்சில் 24 லட்சம், இந்தியாவில் 21 லட்சம், இத்தாலியில் 12 லட்சம் என்ற அளவிற்கு உள்ளது. அமெரிக்காவில் கொரோனா இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.