யுக்ரேன் மீது படையெடுத்து பேரளவு, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை ரஷ்யப் படைகள் நிகழ்த்தியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து நேற்று ஏப்ரல் 7ம் தேதி இடை நீக்கம் செய்துள்ளது ஐ.நா. பொதுச் சபை என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.
“ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேற்ற அமெரிக்கா முன்னெடுத்த இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் விழுந்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐ.நா. பொதுச் சபையில் 193 நாடுகள் உள்ளன. இதில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் நாடுகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தால்தான் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்க முடியும் என்ற நிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது,” என்கிறது ராய்டர்ஸ் செய்தி.
47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஜெனீவாவில் இருந்து இயங்கும் மனித உரிமை கவுன்சிலில் இருந்து நாடுகளை இடைநீக்கம் செய்வது அரிதாகவே நடக்கும். அதிபர் மொம்மர் கடாஃபி ஆதரவு அரசப் படையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய வன்முறைக்காக 2011ம் ஆண்டு லிபியா இப்படி இடைநீக்கத்தை சந்தித்தது.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து ஐ.நா. பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்படும் மூன்றாவது தீர்மானம் இது. ஏற்கெனவே ரஷ்யாவை கண்டித்து நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களும் முறையே 141, 140 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேறின.
யுக்ரேனில் நிலவும் மனிதாபிமான சிக்கல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில், குறிப்பாக ரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியது வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
யுக்ரேனின் ராணுவ கட்டுமானத்தை அழிக்கும் நோக்கத்தோடு சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், பொதுமக்களைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியது. ஆனால், எந்தவிதமான தூண்டலும் இல்லாமல் படையெடுத்ததாக யுக்ரேனும் அதன் கூட்டணி நாடுகளும் தெரிவித்தன.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த, வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடுகளின் செயல்கள் நட்பற்ற நடத்தையாக பார்க்கப்படும் என்றும், இதனால் இரு தரப்பு உறவுகளில் தாக்கம் இருக்கும் என்றும் ரஷ்யா எழுதிய குறிப்பு ஒன்றை தாங்கள் பார்த்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.