களுத்துறை பாலத்தின் கீழ் முகம் கழுவச் சென்ற நபரை முதலை இழுத்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் நேற்று புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.
பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த போது, குறித்த நபரை முதலை ஒன்று திடீரென தாக்கி இழுத்துச் செல்வதை அவதானித்த நபரொருவர் களுத்துறை வடக்கு காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இடத்திலிருந்து பயணப் பை ஒன்றும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரின் புகைப்படத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையும், இரண்டு வங்கி வைப்பு புத்தகங்களும், கடவுச்சீட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.