AEGIS LEXICON 2025 – பாதுகாப்பு சைபர் கண்காட்சி!

0
10

பாதுகாப்பு அமைச்சசின் கீழ் செயல்படும் பாதுகாப்பு சைபர் கட்டளை (DCC),சமீபத்தில் அமைச்சு  வளாகத்தில் AEGIS LEXICON 2025 -பாதுகாப்பு சைபர் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தியது.

ஞாயிற்றுக்கிழமை (03) அன்று நிறுவப்பட்ட DCC யின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இது டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு திறன்களில் இலங்கையின் வளர்ந்து வரும் நிலையை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் எயார்  வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), DCC ஒரு முழுமையான சைபர் படையணியாக பரிணமிக்க வேண்டியதன் வளர்ந்து வரும் அவசியத்தை எடுத்துரைத்தார்.

அமைச்சின் பரந்த பாதுகாப்பு நோக்கங்களுடன் இணைந்து, சைபர் தளத்தில் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக DCC மூலோபாய, செயல்பாட்டு மற்றும் தந்திரோபாய மட்டங்களில் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இந்நிகழ்வு, “National Security in the Age of AI and Cyber Physical Convergence,”என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது, இது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் மீள்தன்மை கொண்ட சைபர் பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவதற்கான அவசரத் தேவையை மையமாகக் கொண்டது. DCC யின் இயக்குனர் பிரிகேடியர் தம்மிக விதானலாகேவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சைபர் தளத்தில் தேசிய மீள்தன்மையை உறுதி செய்வதற்காக சைபர் தயார்நிலை, நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது. எதிர்கால சைபர் சவால்களை எதிர்கொள்ள நாட்டின் முயற்சிகளை முன்னெடுப்பதில் DCC இன் பங்கும் இதில் எடுத்துக்காட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, சட்ட கட்டமைப்புகள் மற்றும் தேசிய உள்கட்டமைப்பின் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பல நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.

பிரிகேடியர் தம்மிக விதானலகேவின்“Cyber Threat Landscape in the Age of AI and Quantum Computing”,கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் “Trust Frameworks Underlying Sri Lanka’s Digital Economy Advancement”மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கசுன் டி சோய்சாவின் “The Algorithmic Battlefield: AI and the Future of National Defence” போன்ற விளக்கவுரைகள் இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் அடங்கும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கலாநிதி துசித B அபேசேகரவின் “Legal Challenges in Strengthening Sri Lanka’s Cyber Security Framework”,சிஸ்கோ லேப்ஸின் திரு. லசந்த பிரியங்கராவின் “Cyber Security Governance and Protection of Critical Infrastructure”மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரோஷன் ராஜபக்ஷ மற்றும் திரு. கென்னத் திலகரத்னாவின் “Securing Against Cyber Physical Attacks in the Evolving Threat Landscape” ஆகியவை மற்றைய முக்கிய விளக்கக்காட்சிகளாகும்.

இந்த விளக்கக்காட்சியின் முக்கிய சிறப்பம்சமாக அரசாங்கம் மற்றும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்களை ஒன்றிணைத்த “Overcoming Cyber Physical Challenges for National Security in Sri Lanka,”என்ற தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது. குழுவில் திரு. வருண ஸ்ரீ தனபால (செயல்பாட்டு செயலாளர், டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்), கலாநிதி. அபராஜித்தா ஆரியதாச, திரு. லக்மல் எம்புல்தேனியா, மேஜர் சந்துன் குணவர்தன, லெப்டினன்ட் கமாண்டர் மெஷேக் ஹேவாவசம் ஆகியோர் அடங்குவர்.

கேர்ணல் தர்ஷன முத்துகல தலைமையிலான DCC தொழில்நுட்பக் குழு, தற்போதுள்ள சைபர் அச்சுறுத்தல்களைக் காண்பிக்கும் ஒரு நேரடி செய்முறை காட்சியை நடத்தியது. இது பங்கேற்பாளர்களுக்கு இலங்கையின் தற்போதுள்ள சைபர் அச்சுறுத்தல்கள் பற்றிய புரிதலை அளிக்க உதவியது.

DCC யின் இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், AEGIS LEXICON 2025 இலங்கையின் சைபர் திறன்களை வலுப்படுத்துவதற்கான மூலோபாய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையைப் பாதுகாக்க தொடர்ச்சியான புத்தாக்கம், சட்ட சீர்திருத்தம் மற்றும் மூலோபாய தயார்நிலைக்கான அழைப்பாக இந்த நிகழ்வு செயல்பட்டது.

டிஜிட்டல் பாதுகாப்பில் இலங்கையின் முயற்சிகளை வழிநடத்த DCC  உறுதிபூண்டுள்ளது மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு யுகத்தில் தேசிய நலன்களைப் பாதுகாக்க அனைத்து களங்களிலும் செயல்படும் ஒரு தேசிய அளவிலான சைபர் படையணியாக   மாற்றம்பெற தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.