நாட்டின் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கமும் ஜனாதிபதியும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றத்தையும் அவர் பாராட்டினார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், கேட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அபிவிருத்திப் பிரிவின் தலைவர் கிறிஸ் எலியாஸ் தலைமையிலான கேட்ஸ் நிதியத்தின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று(10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி போன்ற துறைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சமூக-பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு முழு ஆதரவளிப்பதாக கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இலங்கையின் புதிய மாற்றத்துக்கு கேட்ஸ் நிறுவனம் பாராட்டு!
பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் ’சிறினிவாச’!
கொழும்பு மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான “சிறினிவாச”, பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார் அறிவித்தார்.
இந்த பாரம்பரிய கட்டிடம் சமீபத்தில் சுமார் இரண்டு வாரங்களுக்கு ஒரு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்ததும் வளாகத்திற்கு விஜயம் செய்த மேயர் தெரிவித்ததாவது,
இந்த இல்லம் கணிசமான அளவு பொது நிதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குறுதியளித்தபடி, இது இப்போது கொழும்பின் குழந்தைகளுக்கும், கலைகளுக்கும், பொது நிகழ்வுகளுக்கும், நகர நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படும்,” என்று கூறினார்.
பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு!
பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத நபர் குறித்த பகுதியிலுள்ள வீட்டின் ஜன்னலை உடைத்து அவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை.
சந்தேக நபர்களைக் கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குடு சலிந்துவிற்கும் நிலங்கவிற்கும் இடையிலான மோதலில் குடு சலிந்துவின் தரப்பில் ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
ஒட்டிசமுள்ள பிள்ளைகளுக்கான நிலையங்களை அமைக்க நடவடிக்கை!
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும்.
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 250 மில்லியன் நிதியை மீள திரைசேறிக்குப் பெற்று சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்தை தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.
இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எசல பௌர்ணமி தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

எசல பௌர்ணமி தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் லிந்துலை மட்டுகலை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் லிந்துலை – மட்டுயாய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 126 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியா அத்துமீறிய கட்டிடப் பணி உடனயாக இடைநிறுத்தம்!
திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணியில் இடம்பெற்று வருகின்ற அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வெள்ளைத்தம்பி சுரோஸ்குமாாரின் நேரடி ஆய்வின் பின்னர் கட்டிட பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணியில் தொடர்பு இல்லாத சிலருடைய அத்துமீறிய கட்டிடப் பணி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தலைவர் வெள்ளை தம்பி சுரேஷ்குமார் உபதலைவர் வைரவநாதன் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றைய தினம் புதன்கிழமை (09) அவ்விடத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து கட்டிடப் பணியை உடனடியாக இடைநிறுத்தியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

லொறி – முச்சக்கரவண்டி மோதி விபத்து – 2 பேர் காயம்!!
கண்டி- ஹேவாஹெட்ட பிரதான வீதியில் தென்னேகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹேவாஹெட் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியில் பயணித்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும் அதன் சாரதியுமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தேசிய ஆராய்ச்சி முன்னுரிமைகளை அடையாளம் காண புதிய குழு!
இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், எமது நாட்டில் முதல் முறையாக தேசிய ஆராய்ச்சித் தேவைகளைக் கண்டறிந்து முன்னுரிமை அளிப்பதற்காக ஒரு புதிய தற்காலிகக் குழு ஒன்று கடந்த 07 ஆம் திகதி அமைக்கப்பட்டது.
தேசிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் தேசியத் தேவைகளின் அடிப்படையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழுவின் (NASTEC) தலைவர் பேராசிரியர் ரொஹான் பெர்னாண்டோ ஆகியோர் இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்குவார்கள்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் 20 பேர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் சீரமைப்பதும், தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உரியவகையில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சி முன்னுரிமைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை ஊக்குவிப்பதும் இந்தக் குழுவின் ஏனைய முக்கிய பணிகளாகும்.
இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை நீண்ட காலமாக தனிமைப்படுத்தப்பட்ட, தனித்தனியாக பிரிந்த கட்டமைப்பாக செயல்பட்டு வந்ததோடு பெரும்பாலும் பொருளாதார விரிவாக்கம் அல்லது சமூக முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது.
இந்தக் குழுவை நிறுவுவதன் மூலம், தொடர்புள்ள தரப்பினர்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், நிறுவன அறிக்கைகள் மற்றும் தேசிய ஆய்வுகள் மூலம் கீழ்மட்டத்திலிருந்து அமைச்சு மட்டம் வரை மிகவும் செயற்திறனான, மூலோபாய மற்றும் சமூக தேவைகளுக்குப் பதிலளிக்கக்கூடிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையை உருவாக்க எதிர்பார்க்கிறது.
மேலும் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பது மற்றும் நிதி பொறுப்புக்கூறல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை வரை விஸ்தரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு – இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.