சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்க வாக்குறுதிகள் மீறப்படுகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் சிறுவர்களின் சேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டமை, வெளிநாட்டு டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை(08) பாராளுமன்றத்தில் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்விகளை எழுப்பினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாட்டை மாற்றியமைத்து புதிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்த தற்போதைய அரசாங்கம், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதியை தவிர்த்துவிட்டு பழைய IMF ஒப்பந்தத்தையே தொடர்கிறது.
இதன் விளைவாக, பொதுமக்கள் தற்போது கடுமையான பொருளாதார சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும், மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பதாகக் கூறிய அரசாங்கம் தற்போது மீண்டும் கட்டணத்தை அதிகரிக்கத் தயார் நிலையில் உள்ளது என்றார்.