2022 ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், இன்றைய முதலாவது போட்டியில் நமீபியாவை எதிர்த்தாடிய இலங்கை அணி படுதோல்வியடைந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டத்தில் களம் இறங்கிய நமீபிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களால் தமது அணிக்கு வலுவான ஓட்டங்களை பெறமுடியவில்லை. இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷமான பந்துவீச்சுடன் நமீபிய துடுப்பாட்ட வீரர்களில் சிலர் விரைவாக களத்திலிருந்து விடைபெற்று சென்றதை காணமுடிந்தது. நமீபிய அணியின் முதல் துடுப்பாட்ட வீரர்கள் மூவரும் 5 ஓவர்கள் நிறைவடைவதற்குள் ஆட்டமிழந்தனர். நமீபிய அணி அவ்வப்போது மெதுவாக துடுப்பெடுத்தாடிய போதிலும், நமீபிய துடுப்பாட்ட வீரர்கள் விளாசிய அபாரமான சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் 7 ஆவது விக்கெட்டுக்கு ஓட்ட எண்ணிக்கை வலுப்பெறத் தொடங்கியது. நமீபிய அணியில் ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜே.ஜே. ஸ்மிட் ஆகியோர் முறையே 43 மற்றும் 31 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரமோத் மதுஷான் 37 ஓட்டங்களுக்கு02 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில், 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிய இலங்கை அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் முறையே 6 மற்றும் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். எவ்வாறாயினும், அணிசார்பில் அதிக படியா பானுக ராஜபக்ஷ 20 ஓட்டங்களையும் அணித்தலைவர் தசுன் ஷானக்க 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதன்பின்னர் களம் நுழைந்த வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டத்தில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிய தொடங்கிய நிலையில் இலங்கையின் வெற்றிக்கான சாத்தியம் குறைய தொடங்கியது. அதற்கமைய, 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது. அதன்படி, 2022 இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் நமீபிய அணி 55 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.