அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நோன்புப் பெருநாள் செய்தி!

0
123

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்…´ (ஸுறா பகரா: 185) என்ற இறை கட்டளைக்கிணங்க இறைநெருக்கத்தையும் தக்வாவையும் இலக்காகக் கொண்டு அருள்மிகு ரமழானில் கடமையாக்கப்பட்ட ஒருமாத கால நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்று பெருநாளை அடைந்திருக்கிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சிகரமான நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் எமது குடும்ப உறவுகள், அண்டை அயலவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் ஆகியோரின் தேவைகள் விடயத்திலும் அதிக கவனம் செலுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.

மார்க்கம் வழிகாட்டியுள்ள பிரகாரம் பெருநாளை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் அதேவேளை எம்மைச் சுற்றியுள்ள எமது உறவினர்கள் மற்றும் அயலவர்களும் இத்தினத்தை மனநிறைவுடன் கழிப்பதற்கு வழிசெய்வோம்.

எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நாம் நோற்ற நோன்புகளையும் எமது அமல்களையும் அங்கீகரித்து உயர்ந்த நற்கூலிகளைத் தந்தருள்வதோடு ரமழானில் நாம் அடைந்த பக்குவத்தையும் அல்குர்ஆனுடனான நெருக்கமான உறவையும் கொண்டு அல்லாஹு தஆலா பொருந்திக்கொண்ட சமூகமாக வாழ நல்லருள் புரிவானாக என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.