ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நீண்ட காலமாக சீர் செய்யப்படாத நிலையிலேயே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மன் தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து போராட்டத்தை ஆரம்பித்த மாணவர்கள் ஏ9 வீதிவரை சென்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து மீண்டும் தொழிற்பயிற்சி நிறுவனம் வரை சென்று பிரதான வாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதையடுத்து நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மாணவர்களின் போராட்டம் தொடர்பில் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதிபருமான ஜி.தர்மநாதன் குறிப்பிடுகையில், சம்மந்தப்பட்ட விடயங்கள் தொடர்பின் உரிய தரப்புடனும், அமைச்சுடனும் பேசியுள்ளதாகவும், சீர் செய்யப்படும்வரை, வீடுகளில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். குறித்த பிரச்சினைக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.