லொஸ் ஏஞ்சலிஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் மீள்பிரவேசம் செய்வதற்கு முன்னர் அமெரிக்க விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டும் வகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை சர்வதேச கிரிக்கெட் பேரவை பயன்படுத்தவுள்ளது.
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக அரங்கேற்றப்படவுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பிரதான கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பிரபல்யம் பெற்ற விளையாட்டாகத் திகழ்வது பேஸ் போல் விளையாட்டாகும். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண மேஜர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் MI New York சம்பியனான பின்னர் அமெரிக்காவல் கிரிக்கெட் பிரபல்யம் அடைந்து வருகிறது.
இந்த வருடம் ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முடிவடைந்த சில தினங்களில் இரண்டாவது மேஜர் லீக் கிரிக்கெட் பருவகாலம் ஆரம்பமாகவுள்ளது.இம்முறை நடைபெறவுள்ள 9ஆவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து உட்பட 20 நாடுகள் பங்குபற்றவுள்ளன. ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 20 அணிகள் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும். அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.