அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160 பேர் மாயம்!

0
13

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 161 பேர் காணாமல் போயுள்ளதாக  மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

டெக்ஸாஸில் கடந்த வெள்ளிக்கிழமை (04) திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணி நேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளப் பெருக்கில் சிக்கி இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அன்றிலிருந்து இன்று வரை அதிகரித்த வண்ணமே உள்ளது.

வெள்ளப் பெருக்கினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான  நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கேம்ப் மிஸ்டிக் கோடைக்கால முகாமைச் சேர்ந்த ஐந்து மாணவிகள்,  ஒரு ஆலோசகர் உட்பட 27 பேர் உயிரிழந்துள்னர்.

அதிகாரிகள் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்ட போது முகாமில் இருந்த பலர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். 

ஹில் கன்ட்ரியில் உள்ள கெர் கவுண்டி மற்றும் கெர்வில்லே நகரத்தில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, காணாமல் போயுள்ளார்கள்.

வெள்ளப்பெருக்கில்  டிராவிஸ் கவுண்டி, கெண்டல் கவுண்டி, பர்னெட் கவுண்டி, வில்லியம்சன் கவுண்டி மற்றும் டாம் கிரீன் கவுண்டி போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெக்ஸாஸ் மாநில ஆளுநர் கிரெக் அபட் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டுள்ளார்.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கைகளை முன்கூட்டியே உள்ளூர் அதிகாரிகள்   அனுப்பினார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எலோன் மஸ்க் ஆரம்பித்த அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தேசிய வானிலை சேவைக்கான நிதியை டொனால்ட் டிரம்ப் குறைத்தமை தொடர்பில் ஜனநாயகக் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.