அயர்லாந்தை 8 விக்கெட்களால் வெற்றி கொண்டது இந்தியா

0
66

நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஏ குழுவுக்கான போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட்களால் இந்தியா  வெற்றிகொண்டது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆனால், இந்தியாவுக்கு வெற்றி இலகுவாக வந்துவிடவில்லை.

அயர்லாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் சமயோசிதமாக பந்துவீசியதால் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியம் அவ்வப்போது தடுமாற்றத்திற்குள்ளாகினர்.

மூன்றாவது ஓவரில் மார்க் அடயாரின் பந்தை விசுக்கி அடித்த விராத் கோஹ்லி, தேர்ட் மேன் நிலையில் இலகுவான பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மாவும் ரிஷாப் பான்டும் முதலில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரோஹித் ஷர்மா உபாதை காரணமாக  ஓய்வு    பெற்றார்.

ரோஹித் ஷர்மா 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று  ஓய்வு  பெற்றார்.

9ஆவது ஓவரில் ஜொஷ் லிட்ல் வீசிய பந்து ரோஹித் ஷர்மாவின் வலது முழங்கைக்கு மேல் தசைப் பகுதியை தாக்கியது. அதன் பின்னர் 10ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் ஷர்மா வலி தாங்க முடியாமல் ஓய்வறைக்கு திரும்பினார்.

இதனிடையே ரோஹித் ஷர்மா ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது 37ஆவது இன்னிங்ஸில் 1,000 ஓட்டங்களை (1,015) பூர்த்திசெய்தார்.