நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த விடயம் அப்போது ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது. தற்போது, அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றீர்களா என்பதை அறியும் நோக்கில், கட்சியின் செயலாளர் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பொறுத்தவரையில் மாவை சோனாதிராசா ஒரு மூத்த தலைவர். சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அந்த கட்சியை வழிநடத்தியிருக்க வேண்டியவர் – ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பெருமளவுக்கு அவர் கட்சிக்குள் முக்கியத்துவமற்ற ஒருவராக மாறிவிட்டார். சம்பந்தன் இருக்கின்றபோது கூட, மாவையின் குரலுக்கு கட்சிக்குள் பெரியளவில் செல்வாக்கு இருந்ததில்லை. வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை கொண்டு வந்த விடயம் தொடக்கம், தேசிய பட்டியல் ஆசனத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு வரையில், மாவை சேனாதிராசாவை கட்சிக்கு தேவையான ஒருவராக தற்போதுள்ள தமிழ் அரசு கட்சிக்காரர்கள் கருதவில்லை.
மாவை சோனாதிராசா இலங்கை தமிழ் அரசு கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒருவர். சம்பந்தன் எப்போதும் தன்னை உயர்ந்த நிலையில் பேணிக் கொள்ளும் ஒருவராகவே இருந்திருக்கின்றார் – இதன் காரணமாகத்தான் அவர் பிரதிநிதித்து வப்படுத்திய திருகோணமலையில் கூட அக்கறையில்லாத ஒரு வராக இருந்தார் – ஆனால், ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் கட்சியை பாதுகாத்து, இன்றும் தமிழ் அரசு இருக்கின்றது என் றால் அதற்கு மாவைதான் பிரதான காரணம் ஆனால், மிகவும் குறுகிய காலத்திற்குள் கட்சியில் இணைந்தவர்கள் கூட, மாவை போன்றவர்கள் தேவைதானா என்று கேட்குமளவுக்கே, அவரது இன்றைய அரசியல் முக்கியத்துவம் இருக்கின்றது. தமிழர் (தேசிய) அரசியலில் இரண்டாம் மட்ட தலைமை என்பது எந்தவொரு கட்சியிலும் இல்லை.
இன்றுள்ள கட்சிகளில் ஒப் பீட்டடிப்படையில் ஒரு கட்டமைப்போடு இருக்கின்ற கட்சியென்றால் அது இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டும்தான். இதற்கு காரணம் 1990களுக்கு பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட எந்தவொரு முன்னாள் இயக்கங்களுக்கும் வடக்கு, கிழக்கில் அரசியல் கட்டமைப்புக்கள் இல்லை. அவ்வாறானதொரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் தூரநோக்கில் அவர்கள் செயல்படவும் இல்லை. வெறுமனே ஒரு சிலருக்கு கதிரைகள் கிடைத்தால் போதும் என்னும் மனோ நிலையிலேயே செயல்பட்டனர். இதன் விளைவுதான், போட்டிக் கட்சிகளற்ற நிலையில் தமிழ் அரசு கட்சி மட்டும் ஒரு கட்டமைப்போடு இயங்க முடிகின்றது.
அரசியல் எப்போதும் மாற்றங்களுக்குரியது. மாற்றங்கள் அரசியல் விடயங்களில் மட்டுமல்ல, அந்த அரசியலை கையாளும் நபர்களிலும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. இதனை புரிந்து கொண்டு புதியவர்களுக்கு இடமளிக்கும் நோக்கில், மூத்தவர்கள் மற்றும் நீண்டகாலமாக கட்சிகளின் தலைமைப் பொறுப்பை தங்கள் வசம் வைத்திருந்தவர்கள் ஒதுங்கி, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டியது அவசியம்.அப்படியில்லையென்றால் குறித்த கட்சி ஒரு போதும் வளர்ச்சியடைய முடியாது. அரசியல் கட்சிகள் என்றால் அது இயங்கு நிலையில் இருக்க வேண்டும்.