அலி சப்ரி அரசியலுக்கு புதியவர்?

0
190

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அரசியலுக்கு மிகவும் இளையவர்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விசுவாசமான முஸ்லிமாக இருந்ததால் இவ்வாறானதொரு பதவியை பெறும் வாய்ப்பைப் பெற்றவர்.
அலி சப்ரி தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சராக இருந்தால் கோட்டாபயவின் பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்களுக்கு உதவியாக இருக்கக்கூடுமென்றே சப்ரி தொடர்ந்தும் வெளிநாட்டு அமைச்சராக இருக்கிறார் எனவும் ஓர் அபிப்பிராயம் எதிர்தரப்பினரிடம் உண்டு.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் ஒருமுறை இது தொடர்பில் பேசியிருக்கின்றார்.
ஆனாலும் அலி சப்ரி போன்ற ஒரு தனிநபரால் அவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டுவிட முடியாது.
வெளிநாட்டு அமைச்சராக சப்ரி எதனையும் சாதிக்கவில்லை.
ஒருவேளை கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பதுதான் அவருக்கான பிரதான பணியென்றால்கூட அதிலும் ஒரு துருப்பைக்கூட சப்ரியால் அசைக்கமுடியவில்லை.
அலி சப்ரி வெளிநாட்டு அமைச்சராக இருக்கும்போதுதான், இலங்கையின் வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின்மீது, கனடா தடைவிதித்தது.
ஒரு வெளிவிவகார அமைச்சராக சப்ரிக்கு இது படுமோசமான தோல்வியாகும்.
உண்மையில் இதன் பின்னர், சப்ரி பதவியிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும்.
ஆனால், இலங்கையில் தங்களுடைய தவறுகளுக்கு பொறுப்பேற்று விலகும் அரசியல் நாகரிகம் சிறிதுமில்லை.
தமிழ்த் தலைவர்கள் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு மீண்டும் இளைஞர்களை தவறாக வழிநடத்தி விடக்கூடாதென்று சப்ரி ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை தமிழ் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் சப்ரி
குறிப்பிட்டிருக்கின்றார்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் பிரச்னையில்லை.
ஆனால், முதலில் இது ஒரு சந்தர்ப்பம் என்பதை யார் நிரூபிக்க வேண்டும்? ரணில் விக்கிரமசிங்க தேசிய இனப் பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசியிருந்தார்.
அரசமைப்பிலுள்ள விடயங்களை அமுல்படுத்தப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இன்றுவரையில் அவர் கூறிய விடயங்கள் எவற்றிலும் முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை.
சில விடயங்களில் முன்னேற்றங்களை காண்பித்தால் அல்லவா தமிழ் கட்சிகள் நம்பிக்கையுடன் முன்னோக்கிப் பயணிக்க முடியும்!
தொடர்ந்தும் பௌத்த விகாரைகளை அமைப்பது, புத்தர் சிலையை நிர்மாணிப்பது, தமிழ் பகுதிகளை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் நிர்வாகரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது – எனப் பல வழிகளிலும் மறைமுகமான ஆக்கிரமிப்பு நிகழ்ச்சிநிரலை மட்டுமே சிங்கள தரப்புக்கள் முன்னெடுக்கும்போது எவ்வாறு தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்விடும்?
முதலில் அரசியலில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயல்பாடுகளை, அரசாங்கமல்லவா நிரூபிக்க வேண்டும்.
சில முன்னேற்றங்கள் ஏற்படும்போதுதான், அதனை ஓர் அடிப்படையாகக் கொண்டு, தமிழர் பக்கத்திலிருந்தும் சில விடயங்களை முன்னெடுக்க முடியும்.
அவ்வாறில்லாது தமிழ் கட்சிகள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கூறிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
சந்தர்ப்பங்கள் வெறுமையிலிருந்து வருவதில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விவகாரத்தில் முன்னோக்கி பயணிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுமாக இருந்தால், அதனை புலம்பெயர் சூழலிலிருந்து எவராலும் குழப்பிவிட முடியாது.
ஆனால், எந்தவொரு விடயத்திலும் முன்னேற்றங்கள் ஏற்படாமல் இருக்கின்றபோது புலம்பெயர் சமூகம் மட்டுமே தமிழ் மக்களுக்கான ஒரேயோர் ஆதரவாக மேலெழும்.