இரண்டாம் உலகப் போரின் பின்னர், அவுஸ்திரேலியா எதிர்நோக்கியுள்ள மிகப் பெரும் அச்சுறுத்தல், சைபர் தாக்குதல்கள் என, உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கான, புதிய சைபர் பாதுகாப்பு தந்திரோபாயத்தை அறிவித்துள்ள அமைச்சர், இரண்டாம் உலகப் போரின் பின்னர், அவுஸ்திரேலியா மிகவும் ஆபத்தான மூலோபாய சூழ்நிலையை எதிர்கொள்கின்றது என தெரிவித்தார். கடந்த காலங்களில், அவுஸ்திரேலியா மோதலில் ஈடுபடும் வரை, அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதில்லை.
ஆனால், தற்போது புதிய ஆயுதங்கள், எங்கள் பிரஜைகளின் வாழ்வுக்கு, புதிய பாதுகாப்பு சவால்களை நாளாந்தம் கொண்டு வருகின்றன. சைபர் தாக்குதல்கள், எங்கள் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன. எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை செலுத்தியுள்ளன. எங்கள் தனிப்பட்ட விடயங்கள் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளன. எங்கள் வர்த்தக ஆராய்ச்சியிலும், இது தாக்கத்தை செலுத்தியுள்ளது. நாங்கள், மிகவும் கடினமான முயற்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடித்த விடயங்கள் திருட்டுப் போகும் ஆபத்து காணப்படுகின்றது. சைபர் தாக்குதல்கள், எங்கள் ஜனநாயகத்தின் மீதும், பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எங்கள் பல்கலைகழகங்களின் நாடாளுமன்றத்தின் தீர்மானங்களில், அந்நிய சக்திகள் தாக்கம் செலுத்த முயல்கின்றன. அவர்கள், தவறான பிழையான தகவல்களை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பரப்புகின்றனர். அவை வைரஸ் போல், எங்கள் சமூகத்தில் பரவுகின்றது. என அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் குறிப்பிட்டுள்ளார்.