ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

0
74

ஆந்திர முதலமைச்சராக  சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன.

கடந்த 4 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக (முதலமைச்சராக) சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்தார். பா.ஜனதா மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தார்.தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார். அதே போல் பவன்கல்யாண் மற்றும் டகுபதி புரந்தேஸ்வரி ஆகியோரும் சந்திரபாபு நாயுடுவை தலைவராக தேர்வு செய்ததற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்தனர். சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் கவர்னர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்குமாறு சந்திரபாபு நாயுடுவிற்கு ஆந்திர கவர்னர் அழைப்பு விடுத்தார். இதன்படி, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு கவர்னர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர்கள் ரஜினிகாந்த், சீரஞ்சீவி என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.