தாய்லாந்து – மியன்மார் எல்லையிலிருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து, மியான்மார், சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இணைய மோசடி மையங்களில் பணிபுரிந்த 7,000பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்துள்ளவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்புவது தொடர்பாக தாய்லாந்து, மியன்மார் மற்றும் சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் அடுத்த வாரம் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தின் துணைப் பிரதமர் நிலைமையை விரைவாக ஆராய்ந்து, அனைவரும் விரைந்து நாடு திரும்புவதை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.
தூதரகங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசுகள், தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 7,000பேருக்குமான தங்குமிடவசதி, உணவளிப்பது சவாலானது என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.
சொந்த நாடு திரும்பக் காத்திருக்கும் 7,000 பேரில் அரைவாசிப்பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள், எஞ்சியுள்ளவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.