கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரிகா திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கங்கை நதியின் கிளை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அனர்த்தத்தில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி இடம்பெற்று வருகிறதாகவும் இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதனிடையே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபா வழங்கப்படும் என பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீஹார் மாநிலத்தின் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.