பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவில், 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருவதாகவும் சில வடமாநிலங்களில் ஏற்கனவே பயிற்சி ஆரம்பமாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னர், இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போர் ஒத்திகை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில், சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் நேற்று (07) ஒத்திகை நடைபெற்றுள்ளது. அத்துடன், சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம், புதுச்சேரி ஆகிய இடங்களில் போர்க்கால ஒத்திகை ஆரம்பமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன..
ஒத்திகையின்போது சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிகளை ஏந்தி அணிவகுப்பு நடத்தியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவுத்துள்ளன.
இதேவேளை, இந்தியா நேற்று நள்ளிரவு பாக்கிஸ்தான் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் கீழ் வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை இந்தியா குறிவைத்துள்ளதாக பாக்கிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா, அந்நாட்டு மீது மேற்கொண்ட தாக்குதலில், அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முறையாக அதிகாரம் பெற்றுள்ளன.பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா “பிராந்தியத்தில் ஒரு தீயை மூட்டியுள்ளதாக” கூறியதுடன், இந்தியா இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.