மீண்டும் பௌத்த மேலாதிக்கப் பிரச்னை ஒரு பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
ஒருபுறம் குருந்தூர்மலை விவகாரமும் மறுபுறம் திருகோணேஸ்வர ஆலயப் பிரச்னையும் பேசு பெருளாகியிருக்கின்றன.
2009 இற்கு பின்னரான அரசியல் சூழலில், இந்த விடயம் அவ்வப்போது ஒரு பிரச்னையாக வெளிக்கிளம்பியது.
ஆரம்பத்தில் இந்த விவகாரங்களை சட்டரீதியாகக் கையாளலாம் என்னும் போதனையே செய்யப்பட்டது. குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சட்டத்தின் மூலம் இது போன்ற பல பிரச்னைகளை கையாளலாம் என்னும் வாதத்தை முன்வைத்திருந்தார்.
ஒரு சட்டத்தரனி அதனைத்தான் கூறவும் முடியும்.
ஆனால், இலங்கைத் தீவில் பௌத்தத்தின் அந்தஸ்து சட்டத்துக்கும் அப்பால்பட்டதாக இருக்கும்போது என்ன செய்வது? குருந்தூர்மலை விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
பௌத்த மேலாதிக்க விடயத்தில் பிக்குகள் சட்டத்தை பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
எப்போது வேண்டுமானாலும் அதனை மீறிச் செயல்படக் கூடிய ஆற்றலோடு இருக்கின்றனர்.
ஆனால் மறுபுறமோ, தமிழர்கள் மட்டும் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் இவ்வாறான பிரச்னைகளை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது? எத்தனை காலத்துக்கு இவ்வாறு எதிர்ப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது? ஆனால், எதிர்ப்புக்களாலும் விடயங்களை சரியாகக் கையாள முடியவில்லை.
நிரந்தரமாகத் தடுக்க முடியவில்லை.
இந்தப் பிரச்னையை கையாளுவதற்கு ஒரு தேசிய பொறிமுறை அவசியம்.
அதாவது, இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் செயல்பாடுகள் மீள்வரையறை செய்யப்பட வேண்டும்.
அத்துடன், தொல்பொருள் பாதுகாப்பு என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அனைத்தும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்து ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகள், இந்துக்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்துக்களின் அடையாளங்களை தொல்பொருள் என்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம்
கையாள முற்படுவது முற்றிலுமாகக் கைவிடப்பட வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் இந்துக்களுடன் தொடர்புடைய தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான பிரத்தியேக குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
இதனை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.
பிரச்னைகள் ஏற்படுகின்றபோது, இந்தக் குழுக்களுடன் கலந்துரையாடியே இறுதி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியம் என்னும் பெயரில் தேவையற்ற வகையில் இந்து ஆலய விடயங்களில் பலரும் தலையிடுவதும் தடுக்கப்பட வேண்டும்.
ஒரு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னும் வகையில் தலையிடுவதைத் தவிர, பல குழுக்களும் இதில் தேவையற்ற தலையீடுகளை செய்வது தடுக்கப்பட வேண்டும்.
இரண்டு பக்கத்திலும் இந்த விடயங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
ஏனெனில், பல்வேறு சந்தர்ப்பங்களில் சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டிய விடயங்கள், தேவையற்ற அரசியல் குறுக்கீடுகளால் திசைமாறிவிடுகின்றன.
இதற்கு திருகோணமலை கன்னியா சிவன் ஆலய விவாகரம் நல்ல உதாரணமாகும்.
கட்சி அரசியல் ரீதியான தலையீடுகள் பிரச்னையை வேறு திசைக்கு கொண்டுசென்றது.
இறுதியில் அப்பகுதி பௌத்த பிக்கு, சிங்களவர்களை அணிதிரட்டி எதிர்ப்பை வெளியிடும் நிலைமை உருவாகியது.
ஆலய விவகாரங்களைக் கையாளும்போது, ஒரு பக்குவமான அணுகுமுறை அவசியம்.
முதலில் குறித்த ஆலயத்தின் நிர்வாக சபை மற்றும் அப்பகுதி சமூகத் தலைவர்கள் மட்டத்தில்தான் விடயங்கள் கையாளப்பட வேண்டும்.
அவர்களால் நிலைமைகளை சமாளிக்க முடியாதென்னும் நிலையில்தான், அரசியல் தலையீடுகள் இடம்பெறவேண்டும்.
அதேவேளை, இந்து புராதனங்களையும் தொன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், வடக்கு – கிழக்கு தழுவிய வகையில், இந்துக்களுக்கான பரந்த ஆலயங்கள் மற்றும் மதஸ்தாபனங்களுக்கான கூட்டமைப்பு தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
இதனை உலகளாவிய ரீதியிலான இந்துக்களுக்கான சர்வதேச ஸ்தாபனங்களோடு ஒன்றிணைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்கள், சர்வதேச அளவில் தங்களை ஒன்றிணைத்துக் கொள்வதன் மூலம்தான் முடிந்தளவு பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.