25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பங்குபற்றியது ஏன்?

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பது குறித்த ஏற்பாடுகளிலேயே அமெரிக்க ஜனாதிபதியாகப் புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கவனம் செலுத்துவாரென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடன் அளவுக்கதிகமான குழப்பங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கிவிட்டாரென்ற உணர்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு சமீபகாலமாக வெளிப்பட ஆரம்பித்துள்ளதை ஜோ பைடன் தெரிவிக்கும் கருத்துகள் கட்டியம் கூறுகின்றன.

இந்த இடத்திலேதான் இலங்கையுடனான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் (Millennium Challenge Cooperation) ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது குறித்து ஜோ பைடன் சாத்தியமான சமிக்ஞைகளை இலங்கைக்கு வெளிப்படுத்தக் கூடும். சீனா இலங்கையைக் கடன் பொறிக்குள் தள்ளுகிறது என்று குற்றம் சுமத்தாமல் அமெரிக்கா இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுமென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைப் பொம்பியோவிடம் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச முன்வைத்த யோசனைகளை ஜோ பைடன் பரிசீலிக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன.

கடந்த மாதம் கொழும்பில் நடந்த சந்திப்பின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும் அமெரிக்க முதலீடுகள் இலங்கையில் அதிகரிக்கப்பட வேண்டுமென எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் தகவல்கள் கூறுகின்றன.இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது.

ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்குப் பதிலாக இறக்குமதி உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கைத்தொழில்கள் உற்பத்திகள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணரானபாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கூறுகின்றாா்.

இந்தப் பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம்  (Millennium Challenge Cooperation)  நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்தது என்றகருத்தும் உண்டு. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இது குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பௌத்த குருமாரின் எதிர்ப்புகளையடுத்து இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சத்திடுவதை மைத்திரி அப்போது  தாமதித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்சவும் அவ்வாறான எதிர்ப்புகளினால் பின்வாங்கினாலும், தற்போது அந்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டு இலங்கையைக் கடன் பொறிக்குள் இருந்து மீட்கவே விரும்புகிறார் என்பதை அவருடைய சமீபகால நகர்வுகள் கோடிகாட்டுகின்றன. பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசப்பட்டதால் ஜோ பைடன் நிர்வாகம் இலங்கையோடு அந்த ஒப்பந்தம் குறித்துப் பேச்சு நடத்தி கைச்சாத்திடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.

வேண்டுமானால் ஒப்பந்தத்தில் இலங்கையின் இறைமை சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்கா செயற்படும் என்ற வாசகத்தைச் சேர்ப்பதற்கு ஜோ பைடன் நிர்வாகம் விட்டுக் கொடுக்கவும் கூடும். ஏனெனில் இலங்கை போன்ற சிறிய நாடுகளோடு விட்டுக்கொடுத்துச் செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆகவே ஜோ பைடன் நிர்வாகத்தின் அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்புடையதாக இருக்குமென்ற நோக்கில், அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின்  நாநூற்றி எண்பது மில்லியன்  டொலர்கள் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான எதிர்ப்பை பௌத்த குருமார் கைவிடக்கூடும்.

அதேவேளை, ஜோ பைடன் நிர்வாகத்தில் இலங்கையோடு குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுமென MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி சியேன் கெய்ன்குறஸ்  (sean cairncross) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதேவேளை, வளரும் நாடுகளுக்கான வர்த்தகப் பொருட்கள் அந்தஸ்த்துப் பட்டியலில் இருந்து இந்தியாவை டொனால்ட் ட்ரம் கடந்த ஆண்டு நீக்கியிருந்தார். ஆனால் ஜோ பைடன் நிர்வாகம் அந்த நீக்கத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இந்தியத்தொழில் அதிபர்கள் ஜோ பைடனிடம் கோரவுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் கூறுகின்றது. வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமெனவும் கோரப்படவுள்ளது.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் இந்தியா, ஜே பைடனின் தலைமையிலான அமெரிக்காவோடு மேற்கொள்ளவுள்ள வர்த்தக ஒப்ப்ந்தத்தின் மூலமாக இலங்கையையும் தங்கள் பக்கம் வைத்திருக்கும் திட்டமொன்றை வகுத்துள்ளதாகவே  கருதமுடியும்.

ஆகவே இதன் பின்னணில் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட இலங்கை விரும்பக்கூடும். ஏனெனில் குவாட் எனப்படும் அமெரிக்க இந்தியஇ ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியக் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சித் திட்டத்தில் இலங்கையையும் இணைக்கும் பேச்சுக்கள் நடைபெறவுள்ளன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் இலங்கை இணையுமாக இருந்தால், சீனாவின் கடனுதவித் திட்டங்களில் இருந்து விடுபடுவதற்கான முதலீடுகள் மற்றும் நிதியுதவிகளை அமெரிக்கா கூடுதலகச் செய்யவதற்கான வாய்ப்புகள் உண்டெனலாம்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஜோ பைடன் நிர்வாகம் புதுப்பிக்க வேண்டுமென இந்தியத் தொழிலதிபர்கள் மூலம் விடுக்கப்பட்டவுள்ள கோரிக்கைகூட இலங்கையைச் சீனாவிடம் இருந்து விடுவிப்பதற்கான, பைடனின் வெற்றியின் பின்னரான ஆரம்ப முயற்சியாகவும் அவதானிக்க முடியும்.

அத்துடன் ஜோ பைடனின் வெற்றியின் பின்னர் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் உயர் அதிகாரிகள் பங்குபற்றும் இணையவழி மாநாட்டில் இலங்கையும் பங்குபற்றியமை அதனை மேலும் நிரூபிக்கின்றது.

இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் விடங்கள், பிராந்தியப் பாதுகாப்புகள் உள்ளிட்ட அரசியல், பொருளாதார ஒத்துழைப்புகள் பற்றி சென்ற செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமெரிக்க இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள், கொழும்பிலுள்ள அமெரிக்க இந்திய, ஜப்பான் தூதுவர்கள், மூத்த இராஜதந்திரிகள், படை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இந்த மாநாட்டில் இலங்கை பங்குபற்றியிருப்பது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க- இந்திய நலன்களுக்கு எதிராக இலங்கை செயற்படாது என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டில் இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆரம்ப உரையாற்றியிருக்கிறார்.

கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி பற்றியும் குறிப்பாக இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கை அந்தத் திட்டத்தை முன்னெடுக்குமெனவும் பேராசிரியர் ஜெநாத் கொலம்பகே உறுதியளித்திருக்கிறார். மாநாட்டில் விளக்கமளித்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்காவின் விருப்பங்களை இலங்கை மீது திணிப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.இலங்கையின் தேவைக்கு ஏற்ப விட்டுக்கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

2017-18ஆம்ஆண்டுகளில் திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் இந்தியாவின் மூத்த இராஜதந்திரிசிவ்சங்கர் மேனன் தலைமையில் இடம்பெற்ற  கலந்துரையாடலில்இந்தோ- பசுபிக் பாதுகாப்பு மாநாடு பற்றிப் பேசப்பட்டிருந்தது. கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 2007ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற  கோல் டயலொக்  (Gall Dialog) மாநாட்டிலும் இந்தோ- பசுபிக்பிராந்தியப் பாதுகாப்புக்கான ஒத்துழைப்புகள் பற்றிப் ஆராயப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போது கோட்டாய ஜனாதிபதியாக இருக்கும்நிலையில் நடைபெற்ற இந்த இணையவழி மாநாடு அமொிக்க இந்திய நலன்களுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை நிலை நிறுத்தியிருக்கிறது.  ஆகவே இதன் பின்னணியில் நோக்குவதாக இருந்தால் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கைச்சாத்திடும் என்பதுடன், இலங்கையில் சீன ஆதிக்கம் குறையும் என்பதற்கான சமிக்ஞைகளும் தென்படுகிறதெனலாம்.

ஆனால்  அமெரிக்காவோடு சார்ந்து நிற்கும் இந்த முயற்சி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்படை முயற்சியா அல்லது ராஜபக்ச குடும்பத்தின்கூட்டு ஏற்படா என்பதைத் தற்போதைக்குக் கூறவும் முடியாது. ஆனாலும் ரணில்விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பனும் கோடடாபயவினால் இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டவரும், அமெரிக்க விசுவாசியுமான மிலிந்த மொறகொடவே இதன் ஏற்பாட்டாளர் என்பது மட்டும் உறுதி. இந்த நகர்வுகள் எல்லாமே ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரானவைதான்

அ .நிக்ஸன்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles