பண்டிகை காலத்தை முன்னிட்டு நிவாரண அடிப்படையில் வழங்கப்பட்ட 5000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் இதுவரை பணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சமூர்த்தி, மனை பொருளாதார, நுண்கடன் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழழை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதுவரையில் 22,66,301 குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய இதுவரை 11,332.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5,000 ரூபா கொடுப்பனவு இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று முதல் அத்தொகையை பெற்றுக்கொள்ள முடியும். 5,000 ஆயிரம் பெற்றுக் கொள்ள தகுதியான ஆவணங்களை அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பது அவசியமாகும். ஒரு சில பகுதிகளில் பணத்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லாதவர்கள் அரச அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொள்வதை காண முடிகிறது.
சமுர்த்தி பயனாளிகள் ,குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள்,முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள்,விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள்,சிறுநீரக நோய் நிலைமைக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், நூற்றாண்டு பூர்த்திக்கான முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்