இப்படியும் நடக்கிறது…!

0
162

அண்மையில் தான் நினைத்த அனைவருக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதியை இணங்க வைக்க முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பாவித்த துருப்புச் சீட்டை – இப்போது தான் விரும்பும் அனைவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கவும் பயன்படுத்தி வருகிறார் என்று தெரிய வந்திருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவையை விரிவுபடுத்தி பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித் துவப்படுத்தும் முப்பத்தியேழு பாராளுமன்ற உறுப்பினர்களை அண்மையில் இராஜாங்க அமைச்சர்களாக நியமித்திருந்தார்.
ஆனால், இவர்கள் அனைவரையும் நியமிக்க ஜனாதிபதி எப்படி இணங்கினார் என்பது மர்மமாகவே இருந்தது.
அந்த முப்பத்தியேழு பேரில் பலர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள்.
அவர்களை நியமிக்க எப்படி ரணில் சம்மதித்தார் என்பது மர்மமாகவே இருந்துவந்தது.
பொதுஜன பெரமுனவின் மூளையாக செயல்பட்டுவரும் பஸில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்று இரகசியப் பேச்சுகளின் பின்னரே இந்த இராஜாங்க அமைச்சர்களை நியமித்ததாகவும், இந்த கலந்துரையாடல்களின்போது ஜனாதிபதி தரப்பில் பல்வேறு யோசனைகள், ஆலோசனைகள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை எதனையும் ஏற்றுக்கொள்ளாத பஸில், தமது முடிவில் பிடிவாதமாக இருந்தாரெனவும், இறுதியாக இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வரமுடிந்ததாகவும் கொழும்பில் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கட்டத்தில் பேச்சு முறிவடையக்கூடிய நிலையில் பஸில் தனது கடைசி துருப்பு சீட்டை வாசித்து ரணிலை சரணடையச் செய்தார் என்றும், ஒரு வாரத்துக்குள் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படாது விட்டால் அரசாங்கத்துக்குள் பல பாரிய பிரச்னைகள் உருவாகலாம் என்றும், நினைத்துப் பார்க்க முடியாத பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று ஆளும் கட்சிக்குள் சுயேச்சையாக வெளியேறலாம் எனவும் ரணிலுக்கு தெரிவித்து பஸில் தனது விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் என்கிறது விசயமறிந்த அந்த வட்டாரம்.
இப்போது, அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பிலும் ரணிலிடம் பஸில் பல யோசனைகளை முன்வைத்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பஸில் அறிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் சிலரை நியமிக்க ரணில் விரும்பாதபோதிலும், அதனை ஏற்றுக்கொள்ள பஸில் தயாராக இல்லை என்கின்றது அந்த வட்டாரம்.
அரசாங்கம் பலமாக இருப்பதைக் காட்டுவதற்கு இவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதுடன்,
இதன்படி இந்த நியமனங்களை உடனடியாக செய்து அரசாங்கத்தை பலப்படுத்துமாறும், இல்லையேல் அரசாங்கத்துக்குள் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறாராம்.
இதன்படி, பஸில் பரிந்துரைத்த பெயர்கள் உட்பட மேலும் சிலருடன் பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க ரணில் தயாராகி உள்ளாராம்.
எதிர்வரும் இருபத்தி ஐந்தாம் திகதி ஜப்பான் செல்லும் அவர், அங்கு பல்வேறு உதவிகளை பெறலாம் என்று எதிர்பார்ப்பதால், அதனைப் பெற்றுக்கொண்டு திரும்புகின்றபோது தன்மீது இன்னும் பலருக்கு நம்பிக்கை ஏற்படலாம் என்பதால், அது எதிரணியிலிருந்து சிலரை இழுத்தெடுக்க உதவும் என்பதால் அவ்வாறு சென்று வந்த பின்னரே புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என்கின்றன ரணில் தரப்பு செய்திகள்.!

  • ஊர்க்குருவி