இப்படியும் நடக்கிறது…!

0
174

ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு மேற்குலகு முயன்று கொண்டி ருப்பது குறித்து நேற்றைய தினம் இந்தப் பத்தியில் குறிப் பிட்டிருந்தேன்.
அதற்கு உலகத் தமிழர் இயக்கத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர் தொடர்பு
கொண்டு கேட்டார், “அது என்ன அந்த அறிக்கையில்
உமக்குத் தேவையான பகுதியை மாத்திரம் எடுத்து, ஒருவரை குறிவைத்து தாக்கியிருக்கிறீர்.
அதற்காகத்தானே அந்த அறிக்கையையே மேற்கோள் காட்டினீர்”, என்று அவர் தொடந்துகொண்டே போனார்.
“அந்த அறிக்கையில் இருந்து முக்கிய விடயம் ஒன்றை
வேண்டும் என்றே தவிர்த்திருக்கிறீர்”, என்றும் அவர் என்மீது புகார் பட்டியலை அடுக்கிக்கொண்டே போனார்.
“அந்தப் பத்திக்கு என்று ஆசிரியர் ஒரு ‘லிமிற்’ தந்திருக்கிறாரே. எல்லா விடயத்தையும் ஒரே நாளில் இந்தப் பத்தியில் அடக்கிவிட முடியாதல்லவா”, என்று அவரை சமாளிக்க முயன்றேன்.
அவர் விடுவதாக இல்லை. “நீர் அந்த அறிக்கையை
ஒருதடவை மீண்டும் படித்துவிட்டு காத்திருங்கள். நான் சில
நிமிடங்களில் மீண்டும் அழைக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்.
நான் அந்த அறிக்கைய மீண்டும் படித்தபோது அவர்
இந்த விடயத்தைப்பற்றி குறிப்பிடாமல் விட்டதைத்தான்
கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்த அறிக்கையில் இருந்த மற்றுமொரு முக்கிய விடயம் இதுதான்:
இலங்கை தொடர்பில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46-1 தீர்மானத்தின் அடிப்படையில் இந்த மாதம் தொடங் கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் 49ஆவது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியாகவுள்ளது. இந்த அறிக்கைக்கான தரவுகளை சேகரிப்பதற்கு டிசெம்பர் 31ஆம் திகதி வரை காலஅவகாசம் இருந்தது. ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், புலம்பெயர் தமிழர் அமைப்புகளிடமிருந்து தமக்கு எவ்வித அறிக்கை களோ முறைப்பாடுகளோ கிடைக்கவில்லை என மனித உரிமைகள் ஆணையாளரின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுதான் அந்த அறிக்கையில் இருந்த மற்றுமொரு முக்கிய விடயம். அதனை நான் படித்து முடித்துவிட்ட பின்னர், நண்பரிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.
நான் சொன்னேன்: “இதைத்தானே சொன்னீர். ஆனால், நமது சம்பந்தன் ஐயா ஏற்கனவே ஐ. நாவுக்கு கடிதம் எழுதிவிட்டாரே. அந்த அறிக்கையில் எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தவறுதானே. அதுதான் நான் அதைப்பற்றி குறிப்பிடவில்லை”, என்றேன். “சம்பந்தன் ஐயா கடிதம் எழுதியது எல்லாம் உண்மை தான். ஆனால், அவர் அறுபது வருசமாக எழுதிக்கொண்டி ருப்பதைத்தானே இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இன்றைய உலகில், ஒரு விடயத்தை சொல்வது எப்படி என்பது சம்பந்தன் ஐயாவுக்கு தெரியாவிட்டாலும் அவரோடு இருப்பவர்களுக்காவது தெரியவேண்டாமா?
குறிப்பாக, சட்டத்தரணிகளுக்கு தெரியவேண்டாமா?
அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னரும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை அவற்றின் ஆதாரங்களுடன்ஒரு வழக்கை தாக்கல் செய்வதெனில் எப்படி சாட்சியங் கள், தரவுகளுடன் தாக்கல் செய்வோமோ அதேபோலநடந்த ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தி அல்லவா அனுப்பவேண்டும்.”, அவர் எனக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அவரை இடைமறித்து நான் சொன்னேன்.
“கொஞ்சம் பொறுங்கள். இனித்தான் எமது தலைவர்கள் கடிதம் எழுதுவதற்காக கூடிக் கதைக்கவிருக்கிறார்கள். அதில் ஒற்றுமை வந்தால் ஒரு கடிதம் அனுப்பவார்கள். இல்லையெனில் தனித்தனியாக அனுப்புவார்கள். அதில் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்த்துவிட்டு கதைப்போம். சம்பந்தனுக்கு போட்டியாக தமிழ் அரசில் இருந்தும்
மற்றுமொரு கடிதம் போகவிருக்கிறதாம். கொஞ்சம் பொறுத்திருப்போம்’’ என்றேன்.
“ஓமோம், கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முதல்நாள் அனுப்பச் சொல்லுங்கள். இவர்களின் கடிதத்திற்காகத்தான் மனித உரிமைகள் ஆணையாளர் அம்மையார் பார்த்துக்கொண் டிருக்கிறார்’’ என்று சொல்லிவிட்டு, அவர் தொடர்பை துண்டித்துக்கொண்டார.

ஊர்க்குருவி