இப்படியும் நடக்கிறது…!

0
130

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவது சில வேளைகளில் தாமதமாகலாம் என்ற செய்தி நேற்று முன்தினம் ஈழநாடுவில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது.
அந்தச் செய்தியின் தகவலின்படி தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தாலும், முதலில் ஆறு மாதங்களுக்கு தேர்தலை பின்போட சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டு தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், அதனை ஆறு மாதங்கள் ஒத்திவைக்க அரசு திரைமறைவில் ஆயத்தங்களைச் செய்துவருகின்றது என்பதே அந்தச் செய்தியின் சாராம்சம்.
அப்படியெனில் இப்போது கோரப்படவுள்ள நியமனப்பத்திரங்களே நடக்கவிருக்கும் – அது ஆறு மாதங்களின் பின்னர் நடந்தாலும், ஏற்றுக்கொள்ளபடும் என்பதை ஊகிக்க முடிகின்றது.
அப்படியெனில், தேர்தல் எப்போது நடந்தாலும், அதற்கான நியமனப்பத்திரங்கள் இப்போது கோரப்பட்டு தாக்கல் செய்யப்படும் வேட்பாளர்களே அதில் போட்டியிடவிருக்கின்றனர்.
அப்படியெனில் இந்த வேட்புமனுக்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.
அண்மையில் விக்னேஸ்வரனின் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து ஒரு கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்தக் கூட்டத்தில் வழக்கம்போல தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கலந்துகொண்டிருந்தார்.
இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மாவையருக்கு அதிகமாகவே உண்டு.
ஆனால், அதில் எடுக்கின்ற எந்த முடிவையும் அவர் ஏற்றுக்கொண்டாலும், கடைசியில் கட்சியினருடன் கலந்து ஆலோசித்தே முடிவெடுப்பதாக சொல்லிச் செல்வார்.
ஆனால், அத்தோடு அது முடிந்துவிடும்.
இது ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்பவதிலிருந்து தேர்தலில் போட்டியிடுவது வரை நடந்துகொண்டுதானிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் எல்லாமே ஒன்றாகத் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பது அவசியமானதுதான். ஆனால், அதற்காக நடக்கவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலையும் ஒன்றாக சந்திக்கவேண்டும் என்று யோசிப்பது சரியானதுதானா என்பதை அவர்கள் யோசித்ததாகத் தெரியவில்லை.
கடந்த இரண்டாயிரத்து பதினெட்டாம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட சிறிய சிறிய குழுக்கள்கூட அந்த தேர்தல் முறையில் போனஸ் ஆசனங்களைப் பெற்றன.
அதுவே, பல சபைகளில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றிபெற்ற கட்சிகளால்கூட நிலையான ஆட்சியை வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தியது.
அந்தத் தேர்தல் முறையிலேயே அடுத்த தேர்தலும் நடைபெறுமானால், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக போட்டியிட்டால், மற்றையை கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வரை பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்ள
வாய்ப்பு ஏற்படும்.
இதனால்தான் தமிழரசு கட்சி நடக்கவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலை கூட்டமைப்பாக இல்லாமல் தனித்தனி கட்சிகளாக போட்டியடுவது பற்றியும் அதுபற்றிய தொழில்நுட்ப ரீதியான சாத்தியம் பற்றியும் ஆராய்ந்தது.
அப்போது தமிழரசின் அந்த யோசனை பற்றி இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தபோது, அது பற்றி தமிழரசு தனித்து ஆலோசனை செய்வது தவறு என்பதையே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதுவே, மாகாண சபைகளுக்கான தேர்தலாக இருந்தால், தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக ஓரணியாகப் போட்டியிட்டால் மாத்திரமே வடக்கு – கிழக்கு மாகாணங்களின் ஆட்சியை தமிழர் தரப்பு கைப்பற்றமுடியும்.
ஆனால், உள்ளூராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தல் முடிந்த பின்னர் எப்படி ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றி இப்போதே யோசிக்கலாம்.
அதைவிட இன்னுமொரு விடயம் ஒற்றுமை பற்றிய பேச்சுகள் எப்படி எங்கே நடைபெறவேண்டும் என்பதிலும் நமது கட்சிகளிடையே ஒரு தெளிவான வரைபடம் முதலில் தயாரிக்கப்படவேண்டும்.
வெறுமனே, தேர்தலில் எப்படி ஒன்றிணைந்து போட்டியிடுவது என்பது குறித்துப் பேசுவோம் என்று, விக்னேஸ்வரனின் இல்லத்தில் கூடுவதுகூட ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானா என்பதையும் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்கவேண்டும்.
விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இன்று தமிழ் மக்களின் அரசியல் தலைமையை தன்னிடம் வைத்திருக்கின்றது.
மற்றைய கட்சிகள் எல்லாம் அதற்கு பின்னால் அணிதிரளவேண்டியவை மாத்திரமே.
அவற்றிலும் தனித்தனிக்கட்சிகள் என்றால் அதில் தமிழரசு. அதற்கு பிறகு ரெலோ இப்படி ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்படவேண்டும்.
என்ன இருந்தாலும் பாராளுமன்ற பிரதிநித்துவமே கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்துவன.
ஒற்றுமை என்பதும், தேர்தலுக்கான ஒற்றுமையாக அன்றி, தமிழ் மக்களின் நலனுக்கான ஒற்றுமையாக இருக்கவேண்டும்.!- ஊர்க்குருவி