தமிழரசு கட்சியின் மத்தியகுழு பரபரப்புக்களுக்கு மத்தியில் கூடி சில முடிவுகளை எடுத்திருக்கின்றது.
நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழரசு தனித்துப் போட்டியிடவேண்டும் என்ற கருத்து ஏற்கனவே பேசு பொருளாகி அடங்கியிருந்தவேளையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ, கூட்டமைப்புக்கு வெளியே இருக்கின்ற கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூடிப்பேசின.
போதாக்குறைக்கு பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் த. சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மற்றைய கட்சிகளையும் கூட்டமைப்பில் உள்வாங்கிக்கொண்டு கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்ததுடன் அதற்கான காலக்கெடுவையும் விதித்திருந்தனர்.
அவர்களின் அந்த காலக்கெடு குறித்தும் தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.
அந்த முடிவும் எதிர்பார்க்கப்பட்டது போலவே மற்றையவர்களை சேர்ப்பதில்லை, கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டியதில்லை என்றும் திட்டவட்டமாக முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ரெலோ தலைவரும் புளொட் தலைவரும் கோரிக்கை விடுத்தவாறு விக்னேஸ்வரனை உள்வாங்குவதிலோ, அனந்தி சசிதரனை உள்வாங்குவதிலோ தமிழரசுக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர்கள் இருவரும் தனி நபர்களாக தமிழரசில் மீண்டும் இணையலாம் என்றும் கூறியிருக்கின்றது தமிழரசின் மத்தியகுழு.
இந்த மத்திய குழு உறுப்பினர்கள்போல ஆலோசனை வழங்க அந்தக் காலத்தில் தமிழ் காங்கிரஸில் நல்ல தலைவர்கள் இல்லாமல் போனது தமிழரசின் நல்லகாலம்.
காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்த தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஒன்பதில் தொடங்கினார்.
பின்னர் தமிழரசு தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை பல ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, பல்வேறு ஒப்பந்தங்கள் செய்து கடைசியில் தமிழீழமே தீர்வு என்ற நிலைக்கு வருவதற்கு முன்னதாக தமிழ் காங்கிரஸூடன் சேர்ந்து தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கியது.
அவ்வாறு இரண்டு கட்சிகளும் சேர்ந்து இயங்கவேண்டும் என்று முடிவெடுத்தபோது நல்ல காலம், காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம், அப்படியொரு கோரிக்கையை முன்வைக்கவில்லை.
காங்கிரஸிலிருந்து தானே சொல்வநாயகம் பிரிந்து சென்று தமிழரசு தொடங்கினார்.
அவர் வேண்டுமானால் மீண்டும் காங்கிரஸில் சேரலாம் என்று, தமிழரசுக்கு இன்று ஆலோசனை சொல்பவர்களைப் போன்ற புத்தியுள்ள ஆட்கள் அப்போது பொன்னம்பலத்துடன் இருக்கவில்லையோ தெரியவில்லை.
அப்படி இருந்திருந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியே இருந்திருக்காது.
விக்னேஸ்வரனும் அனந்தியும் வேண்டுமானால் தமிழரசில் இணைந்துகொள்ளலாம்.
சிறீகாந்தாவும், சிவாஜிலிங்கமும் ரெலோவில் இணைந்துகொள்ளலாம்.
பிறகு என்ன, ஒற்றுமை சாத்தியமாகிவிட்டது.
அடுத்து கூட்டமைப்பை பதிவுசெய்யமுடியாது என்று திட்ட வட்டமாக முடிவெடுத்துவிட்டது, தமிழரசு.
ஆனால், அதற்கு சொல்லியிருக்கின்ற காரணம்தான் கட்சியிலுள்ள முக்கிய தலைவர்களுக்கு உடன்பாடானதா என்பது தெரியவில்லை.
‘விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அவர்களது காலத்திலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் எனவே, தொடர்ந்தும் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்றும் தமிழரசின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.’
அதாவது யுத்தம் முடிந்த பின்னர் பல தடவைகள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை திரும்பத்திரும்பக் கூறிவந்திருக்கின்றார்.
புலிகளின் போராட்டத்தை தான் ஆதரிக்கவில்லை என்று சுமந்திரன் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கின்றார்.
ஆனால், இன்று புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை பதிவுசெய்யும் முயற்சியை அவர்களின் காலத்திலேயே செய்யவில்லை என்றும் அதனால் இனியும் தேவையில்லை எனவும் தமிழரசு முடிவெடுத்திருக்கின்றது.
புலிகள் இருந்தபோது, கூட்டமைப்பு எப்படி இயங்கியது என்பது இரகசியமானதல்ல.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரின் முன்னால் சம்பந்தன் ஐயாவும் கூட்டமைப்பு எம். பிக்களும் எவ்வளவு ‘பவ்வியமாக’ அமர்ந்திருந்து அவர்களின் சொல்படி நடந்தார்கள் என்பதும் இங்கே எழுதி தெரியவேண்டியவை இல்லை.
ஆனால், அப்போது இருந்த நிலைமை இப்போது இருக்கின்றதா? கூட்டமைப்பில் இருக்கும் எந்தத் தலைவவர் பொறுப்புணர்வுடன், ஒரு கூட்டு இயக்கத்தில் தாம் இருப்பதாக உணர்ந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்? ஒவ்வொருவரும் தத்தமக்கு தெரிந்தவாறு – தத்தமக்கு விரும்பியவாறு அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர்.
புலிகள் இருந்த போது இப்படியொரு நிலை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதும் நமக்கு தெரியாததல்ல.
கூட்டமைப்பு பதிவு செய்யப்படுகின்றதோ இல்லையோ, புலிகள் இருந்தபோது ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு எல்லோரும் இருந்ததுபோல, ஒரு தலைமை இப்போதும் தேவையாக இருக்கின்றது என்பதில் தமிழ் மக்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது.
அது அவசியமானது மாத்திரமல்ல, அவசரமானதும்கூட.!
- ஊர்க்குருவி