தமிழ் அரசுக்கட்சித் தலைவரும் முக்கிய சிலரும் கட்சி அலுவலகத்தில் காத்திருக்க, யாழ்ப்பாணத்திலுள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்பாளர்
நியமனப் பத்திரங்கள் சுமந்திரனின் இல்லத்தில் வைத்துச் சரிபார்க்கப்பட்டு, அவராலேயே எடுத்துச் செல்லப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட விடயத்தை இந்தப் பத்தியில் ஏற்கனவே எழுதியிருந்தேன்.
அதுதான் பரவாயில்லையே என்பதுபோல ஒரு சம்பவம் இன்னுமொரு கட்சிக்குள்ளும் நடந்து முடிந்திருக்கின்றது.
தமிழ் அரசில் அதன் தலைவர் மாவை பெயரளவில்தான் தலைவராக இருக்கிறார் என்று அவரது மகனே கவலைப்பட்டுக்கொண்டதாக ஒரு செய்தி அண்மையில்
வெளியாகியிருந்தது.
அவரது தலைமை பற்றி நாமும் இந்தப் பத்தியில் பலதடவைகள் எழுதியிருக்கின்றோம்.
அந்தத் தலைமைக்கு சுமந்திரனும் சிறிதரனும் மல்லுக்கட்டி வருவது குறித்தும் பல தடவைகள் எழுதியிருக்கின்றோம்.
அவர்கள் இருவரும் கட்சி அரசியலுக்கு ஏறக்குறைய ஒரே காலத்தில் வந்தவர்கள்.
இருவரும் அரசியலுக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.
அவர்களில் ஒருவர் மாவையின் தலைமையை புரிந்துகொண்டு வேட்பாளர்கள் நியமனத்தின் போது நடந்துகொண்டது மாவையே எதிர்பார்க்காததாக
இருந்தாலும் சுமந்திரனை தெரிந்தவர்களுக்கு அது ஆச்சரியமானதல்ல.
ஆனால் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியில் நேற்று போய்ச் சேர்ந்த மணிவண்ணனும் சகாக்களும், சுமந்திரன் பாணியில், விக்கியரை அவரது இல்லத்தில் காத்திருக்க வைத்துவிட்டு, அவருக்கு சொல்லாமலேயே, வேட்பாளர் நியமனப் பத்திரங்களை நேரடியாக மாவட்டச் செயலகத்திற்கு எடுத்துச் சென்று தாக்கல் செய்திருக்கின்ற விடயம் இப்போது யாழ்ப்பாணத்தில் பேசுபொருளாகியிருக்கின்றது.
விக்னேஸ்வரன் புதிதாக கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசித்த போது அவரோடு அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் தென்மராட்சியின் அருந்தவபாலன்.
அவர் அண்மையில் டான் ரி.வியின் ‘ஸ்பொட்லைற்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றே இப்போது பலரின் கவனத்தையும் பெற்றிருக்கின்றது.
விக்கனேஸ்வரன் கட்சி தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்து சம்பவங்களையும் தனக்கே உரிய பாணியில் மிகவும் கண்ணியமாக அந்தப் பேட்டியில் அருந்தவ பாலன் விபரித்திருந்தார்.
விக்னேஸ்வரனின் கட்சியில் முப்பதுக்கும் அதிகமானவர்கள் மத்தியகுழுவில் இருக்கின்றார்கள்.
விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதியவர்கள் யாரையும் எவரும் கட்சிக்குள் தனக்குத் தெரியாமல் உள்வாங்கி
விடக்கூடாது என்பதற்காக, கட்சியின் மத்திய குழுவின் அனுமதியைப் பெற்றே ஒருவரை சாதாரண உறுப்பினராகக்கூட இணைக்கமுடியும் என்று அதன்
யாப்பில் சேர்த்து வைத்திருந்தார்.
மணிவண்ணனை கட்சிக்குள் சேர்ப்பதற்காக, முப்பது மத்திய குழு உறுப்பினர்களுக்கும், அடுத்த நாள் கூட்டத்திற்கு முதல்நாளே அழைப்பு அனுப்பப்பட்டது.
இதனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெறும் நான்கு பேர் தான்.
அந்த நான்குபேர் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து மணிவண்ணனும் அவரது சகாக்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
அதைவிட நகைச்சுவை, அந்தக் கூட்டத்திலேயே மணிவண்ணன் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டு,, கட்சியின் தேர்தல் பணிகளுக்கும்
பொறுப்பானவராக நியமிக்கப்பட்டதுதான்.
தன்னோடு கட்சியில் இருந்தவர்கள் எல்லோரும் தன்னைவிட்டு தூர விலகிவிட்ட பின்னர், அவருக்கு மணிவண்ணனின் ஆட்களை விட்டால் தேர்தல் பணிக்கு யார் கிடைக்கப்போகின்றார்கள் என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம்.
கட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே, மணிவண்ணன் தனது ‘திறமையை’ காட்டத் தொடங்கிவிட்டார் என்கின்றார் அருந்தவபாலன்.
இதனை எழுதுகின்றபோது அருந்தவபாலன் சொன்ன மற்றுமொரு சம்பவம்தான் ஞாபகத்திற்கு வருகின்றது: விக்னேஸ்வரன் கட்சி ஆரம்பித்தபோது நம்பிக்கையோடு அவரின் கட்சியில் சேர்ந்து கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாக இருக்கும் சிலர், ஒருதடவை கூடிப்பேசி, கட்சியை எப்படிச் செப்பனிட்டு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்பது பற்றி காத்திரமான யோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்றைத் தயாரித்து விக்னேஸ்வரனுக்கு மின் அஞ்சல் முலம் அனுப்பியிருக்கின்றனர்.
எப்போதுமே மின்அஞ்சல் மூலமே தொடர்புகளை வைத்திருப்பவர் அவர்.
மின் அஞ்சல் மூலமே தொடர்புகளைப் பேணுமாறும் அவர் பணித்திருந்தாராம்.
அதனாலேயே மின்அஞ்சலில் அந்த யோசனை ஆவணம் அவருக்கு அனுப்பப்பட்டதாம்.
அந்த ஆவணத்தைப் படித்து விட்டு, மிகச் சுருக்கமான பதில் ஒன்றை, தனது கட்சியின் மத்திய குழுவுக்கு விக்னேஸ்வரன் அனுப்பியிருந்தாராம்:
அந்தப் பதில் – ‘தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது’.
இப்போது அவரிடம் ஒன்றைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை: ‘ஐயா, இப்போது உங்கள் கட்சியில் தலை எது, வால் எது?’
- ஊர்க்குருவி