‘கடந்த எட்டாம் திகதியன்று கொள்கை விளக்கம் செய்த ரணில் பதின்மூன்றாவது திருத்தம் பற்றியோ மாகாண சபை பற்றியே ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
மாறாக மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி அறிவித்தார்.
எல்லோருக்கும் ரணில் ஆப்பு வைத்துள்ளார்.’
இப்படி திருவாய் மலர்ந்திருப்பவர் யாரென்று இங்கே எழுதித்தான் தெரியவேண்டும் என்பதல்ல.
தெரியாதவர்களுக்காக – சொல்லவேண்டியிருக்கின்றது.
இதனைச் சொல்லியிருப்பவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்தான்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
சட்டம் படித்த மனுசன்.
அதைவிட சட்டமேதை பொன்னம்பலத்தின் பேரன் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஒருவர் ஒரு பொய்யைச் சொன்னால் அதனை நம்பிவிடுவதற்கு பலர்
இருப்பார்கள்.
யுத்தம் முடிந்த பின்னர் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு தேர்தல் முடிந்த சில நாட்களில் மக்கள் கூடியிருந்த இடம் ஒன்றில் வைத்து ஒருவர் சொன்னார்,
‘புலிகள் இல்லை என்றதும் புலிகளின் ஆதரவாளர்களையும் தமிழ் மக்கள் கைவிட்டுவிட்டார்கள்’ என்று.
அவர் சொன்னது கஜேந்திரகுமாரின் முன்னணி, பதினையாயிரம் வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்தது பற்றியது.
அதனைக் கேட்ட மற்றொருவர் சொன்னார், ‘இல்லை இல்லை புலிகள் வருவார்கள், அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்பிலிருந்து முன்னணிக்காரர்கள்
வெளியேறியதால்தான் அவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை’ என்று.
இந்த சம்பாசணையைக் கேட்டுக்கொண்டிருந்த இந்த ஊர்க்குருவி, ‘புலிகள் வருவார்கள் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?’ என்று கேட்டார்.
அதற்கு அவர் சொன்னார், ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று செய்திகளில் சன் ரீ.வி. சொல்லியதே.
அப்படியொரு பெரிய ரீ.வி. தெரியாமல் சொல்லுமா?’ என்று, இதை ஏன் இப்போது சொல்கின்றேன் என்றால், சொல்பவர் ஒரு பெரிய மனுசன் என்றால்
அதனை நம்புவதற்கு பலர் இருக்கிறார்கள்.
அதனைத் தெரிந்துகொண்டுதான் நமது சட்டம் படித்த அரசியல்வாதிகளும் அவ்வப்போது பொய்களை அவிழ்த்துவிடுவது வழக்கமாகிவருகின்றது.
இனி மேலே கஜேந்திரகுமார் கூறியிருக்கின்ற விடயத்திற்கு வருவோம்.
மாகாண சபை பற்றி ஜனாதிபதி வாயே திறக்கவில்லை என்றும் அவர் மாவட்ட அபிவிருத்தி சபை பற்றியே அறிவித்தார் எனவும் சொல்லியிருப்பது ஓர் அப்பட்டமான பொய் என்பதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
ஜனாதிபதி உரையாற்றியது சிங்களத்தில்தான்.
ஆனாலும் பாராளுமன்ற நேரலையில் அந்த உரைக்கு நேரடியாகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பும் ஒளிபரப்பாகியது.
அங்கே ரணில் தெரிவித்தவற்றிலிருந்து சில வரிகளை கீழே தருகின்றோம்:
‘அதிகாரப் பகிர்வு செயன்முறையை முறையாக மற்றும் உரியவாறு நடைமுறைப்படுத்த பின்வரும் சட்டங்களுக்கான திருத்த வரைவுகள் தயாரிக்கப்படும்.
1992ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க அதிகார பகிர்வு (பிரதேச செயலாளர்கள்) சட்டம், 1989ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மாகாண சபைகள்
(இடைநேர் விளைவு ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க மாகாண சபைகள்(திருத்த) சட்டம்.
மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்புப் பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை ஸ்தாபிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்த அனைத்து சட்டங்கள் மற்றும் வரைவுகளை நாம் பாராளுமன்றத்தின் தேசிய சபைக்கு சமர்ப்பிப்போம்.
அது தொடர்பாக கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேசிய சபைக்கு வழங்கப்படும்.’
ரணில் தனது உரையில் முதலாவது பந்தியில் தெரிவித்திருப்பது, பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்னர், மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு கையளிப்பதற்கான சட்டங்களை தயாரிக்கப்போவதாக.
இரண்டாவதாக அவர் தெளிவாகச் சொன்னது, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கத்துக்கு இடையில் ஒருங்கிணைப்பு பணிகளை முறைமைப்படுத்துவதற்காக நவீன முறையில் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஸ்தாபிப்பது என்பதே.
அவர் எந்தக் கட்டத்திலும் மாகாண சபைகளை இல்லாமல் ஆக்கி, மாவட்ட சபைகளை கொண்டுவருவதாக சொல்லவில்லை.
இந்த விடயத்தை இங்கே சுட்டிக்காட்டுவதற்காக நாங்கள் மாகாண சபைகளோடு தமிழர் பிரச்னைக்கு தீர்வு வந்துவிடும் என்று சொல்வதாக அர்த்தம்கொள்வது தவறு.
ஒரு பொறுப்பான மக்கள் பிரதிநிதி இவ்வாறு பொய் சொல்லக்கூடாது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே.!
அது சரி, ரணில் எல்லோருக்கும் ஆப்பு வைத்திருக்கிறார் என்றால், உங்களுக்கும் சேர்த்துத்தான் ஆப்பு வைத்துவிட்டார் என்கிறீர்களா?
அப்படியெனில், மாகாண சபை இல்லை என்பது உங்களுக்கும் ஆப்பு என்கிறீர்கள் அப்படித்தானே?
- ஊர்க்குருவி