இங்கிலாந்தின் ஒரு பகுதி யோக்சயர்.
அங்குள்ள எல்லோருமே திறமைசாலிகள்.
அவர்களைப் பற்றி வழங்கும் துணுக்கு இது.
அந்த ஊர் உழவன் ஒருவன் தன் குதிரையில் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தான்.
திடீரென்று அந்தக் குதிரை இறந்துவிட்டது.
அதை அங்கேயே விட்டுவிட்டு ஐந்து மைல் தொலைவில் உள்ள தன் நண்பனின் வீட்டை அடைந்தான் அவன்.
நண்பனும் அவனை அன்புடன் வரவேற்றான்.
இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
புறப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அவன், ‘என்னிடம் அழகான பழுப்பு நிறக் குதிரை இருப்பது உனக்குத் தெரியும் அல்லவா?’
என்று கேட்டான்.
‘நன்றாகவே தெரியும் நல்ல குதிரை’ என்றான் நண்பன்.
‘அந்தக் குதிரைக்கு பதிலாக உன் வெள்ளைக் குதிரையை மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்’ என்றான் அவன்.
‘மாற்றிக் கொள்ளலாம்.
உன் குதிரையின் மீது எனக்கு ஒரு கண் உண்டு’ என்றான் நண்பன்.
‘பிறகு பேச்சு மாற மாட்டாயே’ என்று கேட்டான் அவன்.
‘நீ பேச்சு மாறினால்தான் உண்டு’ என்று உறுதியுடன் சொன்னான் நண்பன்.
‘அப்படியானால் நான் உண்மையைச் சொல்லி விடுகிறன்.
என் குதிரை இறந்து நான்கு மணி நேரம் ஆகிறது’ என்றான் அவன்.
‘அதனால் என்ன? என் குதிரை இறந்து பத்து நாள் ஆகிறது.
அதன் தோலைத் தோட்டத்தில் காய வைத்திருக்கிறேன்’ என்றான் நண்பன்.
அவர்கள் இருவரும் அண்ணளவாக ஒரே வயதினர்.
இருவருமே தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தின் வாரிசுகள்.
இதைவிட முக்கியமானது இருவரும் அரசியலுக்குள் நுழைந்தது மகிந்த ராஜபக்ஷவின் கட்சியினூடாக.
யுத்தம் முடிவடைந்த சில காலங்களில் வெளிநாடுகளிலிருந்த இருவரும் தாயகம் திரும்பி மகிந்த ராஜபக்ஷவின் கட்சியூடாகவே அரசியலில் பிரவேசித்தார்கள்.
ஆனால், அவர்களால் அந்த அரசியலில் வெற்றிபெறமுடியவில்லை.
இப்போது இருவருமே தமது முடிவை மாற்றி தமிழ் தேசிய அரசியலில் நுழைந்து ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார்.
மற்றையவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்.
இருவரும் இடைக்கிடையே சந்தித்து சமகால அரசியல் பற்றி பேசுவதுண்டு.
அண்மையில் இருவரும் சந்தித்தபோது, ஒருவர் கேட்டிருக்கிறார், ‘மச்சான் அவருக்கு அரசியலில் இப்போது நல்லபெயர் இல்லையே.
நீ ஏன் அவரோடு சேர்ந்து இயங்குகின்றாய்? இது உனது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்லவே’.
அதற்கு இவர் சொன்னது, ‘எனக்கு அரசியலில் ஓர் அடையாளம் தேவைப்பட்டது.
தமிழ்த் தேசிய அரசியலில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையென்றாலும், அதனுடாகவே வெற்றிபெற முடியும் என்பதை உணர்ந்ததாலேயே அதில் இறங்கி, நினைத்ததுபோலவே வெற்றிபெறவும் முடிந்தது.
அரசியலில் நான் நினைத்த இடத்தை அடைவதற்கு எப்படி போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது அவர் வந்து ஏணியாக என் முன்னால் நின்றார்.
நான் அவர் தோளில் காலை வைத்து ஏறியிருக்கிறேன்.
நான் நினைத்த இடத்தை அடைந்துவிடுவேன்.
அப்போது எனக்கு இந்த ஏணி தேவைப்படாதுதானே’ அதற்கு அந்த நண்பர் சொன்னார், ‘அவர் தனது பெயரை நிமிர்த்துவதற்கு உன்னைப் பயன்படுத்துகிறார் என்றால் நீ இவரை ஏணியாக்கிவிட்டாய் மச்சான்’ என்று.
இந்த உரையாடல் பற்றி அறிந்தபோது, அந்த ஏணி இப்படி பலருக்கும் அவர்கள் உச்சத்துக்கு வருவதற்கு உதவித் தான் இருக்கின்றது.
ஆனால், அவர்கள் எல்லோருமே தாங்கள் ஏறிவந்த ஏணிக்கு நன்றியாக இருக்காவிட்டாலும் பரவாயில்லை, அதனை தட்டிவிடாமலாவது இருந்திருக்கலாம்.
இந்தக் கதையை அவர் கூறிக்கொண்டிருந்தபோதுதான் சில மாதங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் சொன்ன கதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.
மேலேயுள்ள அந்த அரசியல்வாதியும் அவரின் ஏணியும் சில மாதங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்தனர்.
அப்போது இருவரையும் சில புலம்பெயர் அரசியல் – சமூக செயல்பாட்டாளர்கள் சந்தித்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்தான் இது.
இவர்கள் இருவரும் கதைத்துக்கொண்டிருந்தபோது ‘ஏணிக்கு’ தொலைபேசி அழைப்பு வந்தபோது அவர் எழும்பி வெளியே சென்றுவிட்டார்.
அவரின் கதிரையில் தற்செயலாக அமர்ந்துவிட்ட அந்த இளம் அரசியல்வாதி, சுதாகரித்துக்கொண்டு அதிலிருந்து எழும்பியபோது சொன்னாராம், ‘இந்தக் கதிரைதான் எனது குறி.
ஆனால், இப்போது அதற்கு அவசரப்படவில்லை’ என்று.
யோக்சயர் நண்பர்கள் இருவரும்தான் இப்போது நினைவுக்கு வந்தனர்.
- ஊர்க்குருவ