இப்படியும் நடக்கிறது…!

0
138

ஓர் ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன.
முதலில் இரண்டு இனங்களும் மிகவும் நட்பாக வாழ்ந்து வந்தன.
பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக்கொண்டு வாழ்ந்தன.
ஓர் இனம் வாழும் இடத்துக்கு மற்றோர் இனம் போகக்கூடாது.
மீறினால் தண்டனை என்று அறிவித்துவிட்டு தத்தமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்துவந்தன.
இதில், ஒரு விலாங்கு மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்துகொண்டிருந்தது.
பாம்புகள் இடத்துக்குப் போகும்போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.
மீன்களின் இடத்துக்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக்கொள்ளும்.
இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக்கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.
வெயில் காலம் அதிகமானது.
ஏரி மேலும் வற்றியது.
பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.
ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றின் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.
அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின.
பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.
‘நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல’, என்று விலாங்கு கதறியது.
நம்புவாரில்லை.
விலாங்கு, ‘முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ’, என்று நினைத்துக்கொண்டு செத்தே போனது.
சில செய்திகளைப் படித்தபோது இந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
பயங்கரவாத தடைச் சட்டம் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டில் அமுலில் இருந்தபோது யாரும் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.
சில சர்வதேச நிறுவனங்களும் நாடுகளும்தான் அந்த கொடிய சட்டத்துக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்து வந்தன.
இலங்கைக்கு கிடைத்துவரும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்த பின்னர், அதனை நீக்கியே ஆகவேண்டும் என்ற நிலைமை இலங்கைக்கு வந்த பின்னர்தான், அதனை நீக்கி புதிய சட்டத்தை கொண்டுவர இலங்கை முன் வந்தது.
இந்த நேரம் பார்த்து அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று தமிழரசுக் கட்சியும் ஊர்வலம் போனது.
ஆனால், இருக்கும் சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசாங்கம் முன்வந்ததும் – பின்னர் இப்போது அதற்காக புதிய சட்டத்தை தயாரித்து வெளியிட்டிருப்பதும் வாசகர்கள் அறிந்ததுதான்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பழைய சட்டத்தைக் கொண்டு வந்தபோது தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அவர்களின் போராட்டத்தை அடக்குவதற்காகவே- அதாவது தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்தே அந்தச் சட்டத்தை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த
ஜே.ஆர். ஜெயவர்த்தன கொண்டு வந்தார்.
அதனால் தமிழ் இளைஞர்கள் பட்ட துன்பங்கள் எழுத்தில் வடிக்கமுடியாதவை.
இப்போது ஜே.ஆரின் மருகர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி.
அவர் இப்போது எதிர்கொள்வது எத்தகைய நெருக்கடி என்பது தெரிந்ததுதான்.
அதனால்தானோ என்னவோ அவர் தான் எதிர்கொள்ளும் நெருக்கடியை தணிக்க இந்த புதிய சட்டத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தச் சட்டம் யாரை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது என்பது இரகசியமானதல்ல.
மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தைத் தமிழ் இளைஞர்கள் ஆரம்பிகக்கப்போவதில்லை என்பது ரணிலுக்கு நன்கு தெரிந்ததுதான்.
ஆனால், மீண்டும் ‘அரகலய’ வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அதனால்தானோ என்னவோ ரணில் தனது புதிய சட்டத்தில் அவற்றையெல்லாம் அடக்குவதற்கு யோசிக்கின்றார்.
அந்த சட்டம் அனைவருக்குமே ஆபத்தானதுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதனை என்ன விலை கொடுத்தும் தடுக்கவேண்டும் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
ஆனால், நாம் இங்கு சொல்லவருவது. ஒருவர் தனது இனத்தை மறைக்க பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
உதாரணமாக தான் ஒரு தமிழர் என்று சொல்வதை தவிர்த்து வருகிறார் என்றால், அவரின் பாதத்தை திடீரென்று நமது சப்பாத்துக் காலால் மிதித்தால் அவர்
‘அம்மா…’ என்று கத்துவார்.
அதுபோலத்தான், இப்போது வடக்கில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற பலரும் தெற்கில் தங்களை சிறீ லங்கா தேசியவாதிகளாகக் காட்டி வருவருவதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள்.
இப்போது இந்த புதிய சட்டம் இலங்கையில் குறிப்பாக தெற்கில் சிங்கள மக்களை பாதிக்கும் வகையில் இருப்பதாக நமது தமிழ்த் தேசியவாதிகள் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
தெற்கில் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால் அதைப் பார்த்து சந்தோசப்பட்ட தமிழ்த் தேசியவாதிகள் இப்போது, ஐயோ சிங்கள இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று கவலைகொள்கின்றார்கள்.!
இதனைப் படிக்கின்றபோது மேலேயுள்ள விலாங்கு மீன் ஞாபகத்துக்கு வந்துபோவதைத் தவிர்க்க முடியவில்லை.

  • ஊர்க்குருவி