நண்பர் ஒருவர் பிரான்ஸிலிருந்து தான் எழுதிய கடிதம் ஒன்றை வட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.
அது ஒரு முறைப்பாட்டு கடிதம்.
அதனை ஏன் இந்த ஊர்க்குருவியிடம் அனுப்பினார் என்பது தெரியவில்லை.
அதனால் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.
சில நாட்களின் பின்னர் அந்தக் கடிதத்தை எழுதியவர் தொலைபேசியில் பேசினார்.
‘அந்தக் கடிதம் குறித்து எழுதுவீர்கள் என்று இதுவரை தினமும் உங்கள் பத்திரிகையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆனால், நீங்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை அது தான் இப்போது பேசுவதற்காக எடுத்தேன்’, என்றார்.
‘அந்தக் கடிதத்தை நீங்கள் அனுப்ப வேண்டியவருக்கு அனுப்பிவிட்டீர்களா’, என்று கேட்டேன்.
‘அவருக்கு எழுதுவதிலும் பார்க்க அது உங்கள் பத்திரிகையில் வந்தால்தான் இனி இதுபோன்ற தவறுகளை யாரும் செய்யமாட்டார்கள்’, என்றார் அவர்.
‘இது ஒரு மத விவகாரம்.
இதனை பகிரங்க வெளியில் கதைப்பது சரியாக இருக்காது என்பதால்தான் அதனை தவிர்த்துவிட்டேன்’, என்றேன்.
அவர் விடுவதாக இல்லை.
‘சைவ சமயத்தவர்கள் நல்லை ஆதினத்துக்கு உரிய கௌரவத்தைக் கொடுக்கவில்லை என்று ஒருநாள் எழுதியிருந்தீர்களே, அதுபோலத்தான் இதுவும்.
அது மாத்திரமல்ல, பிரான்ஸ் நாட்டில் வாழும் பல ஆயிரம் கத்தோலிக்க ஈழத்தமிழர்களுக்கு ஆன்மீகப் பணியாற்றுவதற்கு நியமிக்கப்படுகின்ற ஒரு பணியாளர் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டியதும் உங்களைப்போன்ற நேர்மையான பத்திரிகையாளர்களின் பணிதானே’, என்றார் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் கத்தோலிக்கர்களுக்கு பணியாற்றுவதற்காக புலம்பெயர் நாடுகள் எங்கும் அருட்பணியாற்றுவதற்காக ஒவ்வோர் அருட்பணியாளர்கள் இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்றார்கள்.
பிரான்ஸ் நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் மத்தியில் அருட்பணியாற்றுவதற்காக யாழ்ப்பாண கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஒரு பணியாளர் அனுப்பப்பட்டு
அவர் அங்குள்ள தமிழ் கத்தோலிக்கர்களுக்காக பணியாற்றி வருகின்றார்.
பிரான்ஸில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்று அங்குள்ள தமிழ் அருட்பணியாளரால் அங்குள்ள கத்தோலிக்க ஆலயத்தில் நடத்தி வைக்கப்படவிருந்தது.
திருமண வைபவம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வு.
அதனை எவ்வளவு சிறப்பாக நடத்தி முடிக்கவேண்டுமோ அவ்வளவு சிறப்பாக நடத்துவதற்கே ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள்.
அதுவும் ஈழத்தமிழ் பெற்றோரைப் பொறுத்தவரை தமிழில் தேவாலயத்தில் பூசை வைப்பதைத் தவறாது செய்துவருகின்றனர்.
அதனால்தான் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததியும் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.
பிரான்ஸில் அருட்பணியாற்றிவரும் அருட்பணியாளர் அந்தத் திருமண வைபவத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டு ஏற்பாடுகள் நடந்து முடிந்துவிட்டிருந்தன.
ஒரு கத்தோலிக்க தம்பதியரை திருமண வாழ்வுக்கு தயார்படுத்துகின்ற அருட்பணியையும் அவரே செய்தும் இருந்தார்.
திருமணத்துக்கு முதல் நாளன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த அருட்பணியாளர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் தன்னால் வர முடியவில்லை என்றும் பிரான்ஸில் வாழும் பாண்டிச்சேரி தமிழர்களுக்கு அருட்பணியாற்றும் ஓர் அருட்பணியாளரை ஏற்பாடு செய்வதாகவும்
கூறியிருந்தார்.
பெற்றோரும் வேறு வழியின்றி, திருப்திப்பட்டுக்கொண்டனர்.
திருமணம் நடந்து முடிந்த மறுநாள்தான் அது தெரியவந்தது.
அன்றைய தினம் நடைபெற்ற மற்றுமோர் இலங்கைத் தமிழரின் முதல் நன்மை திருப்பலியில் அந்த அருட்பணியாளர் கலந்துகொண்டிருந்தமை.
இந்தத் திருப்பலியை நடத்துவதற்கென்றே அவர்களின் உறவினர்களான வேறு இரண்டு அருட்பணியாளர்கள் இலங்கையிலிருந்து தனிப்பட்ட வகையில் பிரான்ஸ் வந்திருந்தனர்.
தனது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதற்காக – இவரும் அந்த வைபவத்துக்கு சென்று மகிழ்வதற்காகவே இந்தத் திருமணத்தை அவர் தவிர்த்திருந்தமை பின்னர் தெரிய வந்திருக்கின்றது.
இந்தக் கடிதத்தை எழுதியவர் வேறு யாரும் அல்லர், சம்பவத்தை கேள்விப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு கத்தோலிக்கர்தான்.
கத்தோலிக்கர்கள் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவென்று இயேசு பத்துக் கட்டளைகளை உருவாக்கினார்.
அதில் பொய்ச்சாட்சி சொல்லாதே என்பதும் ஒரு கட்டளை.
அந்த அருட் பணியாளருக்கு இயேசு பொய் சொல்லாதே என்று கட்டளை இடவில்லை என்பதால்தான் கொரோனா தொற்று என்று பொய் சொன்னாரோ தெரியவில்லை.
ஒரு காலத்தில் வண. பிதா என்றுதான் இவர்கள் அழைக்கப்பட்டனர்.
பிதா- தந்தையே பொய் செல்ல தொடங்கினால் அந்த சமூகம் முழுவதுமே பொய் சொல்லத் தொடங்கிவிடும்.!
- ஊர்க்குருவி