இப்படியும் நடக்கிறது…!

0
138

உள்ளூராட்சி தேர்தலை அநேகமாக எல்லோருமே மறந்தே விட்டார்கள்.
மக்களின் ஜனநாயக உரிமை பற்றி கதைத்தவர்கள் இப்போது அதனை மறந்தே விட்டனர்.
இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் ஜனாதிபதித் தேர்தலில் திரும்பியிருக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி, தான் விரும்பினால் ஒரு வருடம் முன்னதாக தேர்தலை நடத்தலாம் என்ற அரசியலமைப்பு சட்டம் ரணிலுக்குப் பொருந்தாது என்றும் அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் முழுவதும் பதவி வகிக்கவே பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்டவர் எனவும் வாதிடப்படுகின்றது.
அதனால் அது தொடர்பாகஅதாவது பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியும் தான் விரும்பினால் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே தேர்தலை நடத்தலாம் என்றவாறாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஆயத்தங்களை ஜனாதிபதி ரணில் தொடங்கிவிட்டாரென அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அர்த்தம் நாம் விளங்கிக்கொள்ளக்கூடியதே.
அதாவது எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு பின்னர் எந்த நேரத்திலும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அவர் தயாராகிவிட்டார் என்பதே.
முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படுவதற்கு ஏதுவாக அரசியலமைப்பு சட்டத் திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுமானால் அதனை யாரும் எதிர்க்கமாட்டார்கள் என்று நம்பலாம்.
அவ்வாறு இல்லாமல் அதனை யாராவது எதிர்த்தால் அது, மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி மாற்றம் ஒன்றையே அவர்கள் விரும்பவில்லை என்றாகிவிடும்.
அவ்வாறு திருத்தம் கொண்டுவரப்படும் என்பது அநேகமாக உறுதியாகி விட்டதாலேயே இப்போது அரசியல் கட்சிகளின் கவனம் முழுவதும் ஜனாதிபதித் தேர்தல் மீது திரும்பியிருக்கின்றது.
அண்மையில், ஐக்கிய மக்கள் சக்தியின் செயல்குழு கூடி ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது எனவும் அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாஸதான் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
அப்படியொரு தீர்மானம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்று ஆராய முற்பட்டால் பல தகவல்கள் வெளிக்கிளம்புகின்றன.
இன்றைய நிலையில் நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் என்று சாதாரண மக்களும் நம்புகின்ற அளவுக்கு ரணில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் என்பது இரகசியமானதல்ல.
இந்நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய நிலையில் தான் இல்லை என்பதை சஜித் அறியாதவரல்ல.
அவர்களின் செயல்குழு கூட்டத்திலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் சக்திவாய்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களை காணமுடியவில்லை.
அவர்களில் பலர் ரணில் பக்கம் தாவுவதற்கு தயாராக இருந்தாலும் தேர்தல் அறிவிக்கப்படும் வேளையில் – இன்றைய நிலையில், அதாவது ரணில் மீதான
மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படலாமோ என்ற சந்தேகம் இருப்பதாலேயேதேர்தல் அறிவிக்கப்படும் வேளையிலும் ரணில் மீதான
மக்களின் அபிப்பிராயம் இப்போது இருப்பதுபோன்ற நிலையில் இருந்தால், தேர்தல் வேளையில் கட்சி மாறாலாம் என்று அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவே கூறப்படுகின்றது.
அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படும்போது ரணிலுக்கு எதிராகக் களம் இறங்குவதை சஜித் விரும்பவில்லை என்றும் அவரின் மனநிலையை அறிந்ததாலேயே கட்சியிலுள்ள அவரது விசுவாசிகள் அப்படியானதொரு தீர்மானத்தை அன்றைய தினம் நிறைவேற்றினரெனவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து மிகப்பெரிய கூட்டணி ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் விரும்பும் அவர்கள் அதற்காக எதிரணியிலுள்ள கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கும் அன்றைய கூட்டத்தில் சஜித்துக்கு அனுமதியை வழங்கியிருந்தனர்.
ஏற்கனவே, அவரோடு இணையத்தயாராக இருக்கும் டலஸ்- பீரிஸ் அணியினருடன் மேலும் பல சிறிய சிறிய குழுக்களை அணைத்துக்கொள்ளவும்,
அதேவேளை சிறீ லங்கா சுதந்திர கட்சியையும் தமது அணியில் இணைக்கவும் சஜித் தமது முயற்சியை தொடங்கிவிட்டதாகவும் அவர்களுக்கு நெருக்கமான அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மீண்டும் ஜனாதிபதிக்கான களத்தில் இறங்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் மைத்திரி அதற்கு சம்மதிப்பாரா என்பது தெரியவில்லை.
ஆனால், இது குறித்து சொன்ன, தெற்கின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர், இன்றைய நிலையில் எதிரணியில் என்னவும் நடக்கலாம், அதிகம் ஏன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நடந்த தேர்தலில் கடைசிநேரத்தில் சஜித் பின்வாங்கி டலஸ் அழகப்பெருமவை ஆதரித்ததுபோல நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலிலும் திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியம் இல்லை என்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரமே வெற்றிபெற்றவர் கோட்டாபய.
அந்த அறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகளையும் இலக்குவைத்து மற்றுமொரு தரப்பும் காய்நகர்த்தி வருகின்றதாம்.
அது பற்றி நாளை பார்ப்போம்.

  • ஊர்க்குருவி