இப்படியும் நடக்கிறது…!

0
218

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வேலைக்கு போகின்றவர்கள் மாதத்தில் ஒருதடவைதான் லீவில் வீட்டுக்கு வருவார்கள்.
அநேகமாக அரச தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற அனைவருமே இப்படித்தான்.
சிலர் மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒருதடவைதான் யாழ்ப்பாணம் வருவர்கள்.
அவர்களின் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கும்.
அதனால் மாதந்தோறும் சம்பளம் எடுத்ததும் அதனை மணிஓடரில் அனுப்பிவிடுவார்கள்.
அதனால்தான், யாழ்ப்பாண வாழ்க்கையை ‘மணி ஓடர் வாழ்க்கை’ என்று அந்தக்காலத்தில் சொல்வார்கள்.
ஒரு பிரிட்டன் கொம்பனியில் பணியாற்றிய ஒரு யாழ்ப்பாணத்தவர், அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்துபோவார்.
அவர் லீவு எடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தந்தியை அனுப்பச் சொல்விவிட்டு அதனைக் காட்டியே அவர் லீவு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு தடவை லீவு எடுப்பதற்காக உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கச் சொல்லியிருந்தார்.
தந்தியுடன் அந்த பிரிட்டிஷ் கொம்பனியின் அதிகாரியிடம் போய் தந்தியை காட்டியிருக்கிறார்.
அவர் இவரை சமாதானப்படுத்தியவாறு, அனுதாபம் சொல்லியிருக்கிறார்.
உடனே இவர், இறந்தவர் தனக்கு மிக நெருக்கமானவர் அல்ல என்றும் தூரத்து உறவினர்தான் எனவும் சொல்லியிருக்கிறார்.
அதாவது அவரின் இறப்பு தனக்கு பெரிய கவலைக்குரியது அல்ல என்பது போல.
அதற்கு அந்த பிரிட்டிஷ் அதிகாரி சொன்னாராம், ‘நோ.. நோ… இந்த ஒருவரின் இறப்புக்காக மட்டும் நான் இரங்கல் தெரிவிக்கவில்லை.
நீர் இப்போது அநேகமாக அநாதையாகியிருப்பீர்.. அதற்குத்தான் உமக்கு இரங்கல் தெரிவித்தேன்’, என்று.
இவர் ஒவ்வொரு தடவையும் லீவு எடுக்கும்போது ஒவ்வொருவராக இறக்கப் பண்ணியதால் அவர் அநாதையாகி விட்டார் என்று அவரின் அதிகாரி நினைத்துவிட்டாரோ அல்லது இவரின் ‘திருகுதாளம்’ தெரிந்து நக்கல் அடித்தாரோ தெரியவில்லை.
இந்தக் கதைதான் அந்தச் செய்தியை படித்தபோது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அனைவரையும் நினைவு கூருவதற்கான பொது நினைவுத்தூபி விவகாரத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தையும் அதனையடுத்து சிலர் அதற்கு எதிர்வினையாற்றிய செய்தியையும் படிக்க முடிந்தது.
‘நாட்டில் நீடித்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது குடியியல் குழப்பங்களால் உயிரிழந்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார், போராளிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர கொழும்பில் பொது நினைவுத்தூபி அமைக்க ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.’
இந்தச் செய்தியை அறிந்ததும், தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள தலைவர்கள் எல்லோருமே அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நேரத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், ‘என்னைப் பொறுத்தவரையில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவே பார்க்கின்றேன்.
இத்தனை ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் எதிர்மறையாகச் சிந்தித்தவர்கள் தற்போது மாறுபட்டுச் சிந்திக்கின்றர்கள்.
இந்தச் சிந்தனையானது இதயசுத்தியுடனானதாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
அதாவது, இறந்த தமிழ் மக்களுக்காகவும் பொதுத்தூபி அமைக்க வேண்டும் என்ற சிந்தனையை வரவேற்றிருக்கிறார்.
அவரின் இந்த அறிக்கையை படித்ததும், அவரை முதல்வராக்கிய தமிழரசு கட்சியே அவரை அந்த பதவியிலிருந்து வெளியேற்ற முயன்றபோது அவருக்கு
ஆதரவாக இளைஞர்கள் பொங்கி எழுந்த காட்சி மனக்கண்ணில் வந்து மறைந்தது.
அவரை நம்பிக்கொண்டே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது.
அவரே தமிழ் தேசியத்தின் காவலனாகக் காட்சி தந்தார்.
இப்போது அவர், தான் யார் என்பதை தனது ஒவ்வொரு நடவடிக்கை ஊடாகவும் தினமும் தன்னை வெளிப்படுத்தி வருகின்றார்.
இதனால் அவரை ‘தேசியத் தலைவராகப்’ பார்த்தவர்களே இப்போது அவரை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.
லீவு எடுப்பதற்காக உறவினர்கள் இறந்துவிட்டனரெனத் தந்தி அடிப்பித்த அந்த யாழ்ப்பாணத் தமிழர் லீவு எடுப்பதற்காக பொய் சொன்னார்.
இந்தக் கதை ஏன் எனக்கு இப்போது ஞாபகத்துக்கு வந்தது என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

  • ஊர்க்குருவி