இப்படியும் நடக்கிறது

0
145

விளையாட்டுத்துறை அமைச்சர் திடீரென்று கிரிக்கெட் சபையை சீர்த்திருத்தப் போவதாகக் கூறிக்கொண்டு, ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டுசெல்லாமல் அர்ஜூன ரணதுங்க தலைமையில் குழு ஒன்றை நியமித்தமை சில நாட்களாக பேசு பொருளாகியிருந்தது.
அவர் ஆரம்பத்தில் ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானியான சாகல ரத்நாயக்க மீதே தனது அதிருப்தியை வெளியிட்டார்.
அப்போது ஜனாதிபதி மீது தனக்கிருக்கும் மரியாதையையும் வெளிப்படுத்தினார்.
ஆனால், நாட்கள் செல்லச்செல்ல அவர் தனது போக்கை மாற்றிக்கொண்டு ஜனாதிபதி மீதான விமர்சனத்தையும் வைக்கத் தொடங்கினார்.
அப்போதும்கூட அவற்றைக் கண்டுகொள்ளாத ஜனாதிபதி, பாராளுமன்றில் தனக்கு எதிராக அவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்த போது வேறு வழியின்றி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
தனது உயிருக்கு ஜனாதிபதியாலும் சாகல ரத்நாயக்கவாலும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அப்படி தனக்கு ஏதாவது நடந்தால் அவர்கள் இருவருமே பொறுப்பு என்றும் அவர் பாராளுமன்றத்தில் கூறியபோது ஜனாதிபதிக்கு வேறு வழி இருக்கவில்லை.
ஆனால், அப்போதும்கூட அவரை அப்படியே இன்னும் சில நாட்களுக்கு விட்டிருந்தால் அவர் காணாமல் போயிருப்பார் என்றும் ஜனாதிபதி அவசரப்பட்டுவிட்டார் எனவும் தெற்கில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷான் ரணசிங்க ஏன் இப்படியெல்லாம் திடீரென்று ‘தனி ஆவர்த்தனம்’ ஆடத்தொடங்கினார் என்று இதற்கு முன்னரும் இந்தப் பத்தியில் ஒரு தடவை எழுதியிருந்தேன்.
அதாவது, அவரின் ஆஸ்தான சோதிடர் அவரின் சோதிட பலனின்படி அவர் நாட்டின் தலைவராவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தமையைத்
தொடர்ந்தே அவர், கிரிக்கெட் சபையை கையில் எடுத்தார் என்பதும் அவர் தன்னை ஓர் ஊழலுக்கு எதிரான ஆளாகக் காட்ட முயற்சி செய்ததும் தெரிந்தவைதான்.
ஆனால், அவரது இந்த ஜனாதிபதி பதவி ஆசைக்கு யார் தீனி போட்டார்கள் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது.
அவரை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னதாக – அதாவது அவர் பாராளுமன்றில் ஜனாதிபதி மீது குற்றம்சுமத்தி உரையாற்றிய அன்று பாராளுமன்றத்துக்கு சென்ற ஜனாதிபதி அங்கேயே அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதும் அந்தக் கூட்டத்தில் வைத்து அவரிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டதும் ஏற்கனவே ‘ஈழநாடு’விலும் செய்திகளாக வந்திருந்தன.
அதாவது எதற்காக அவர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் என்று ஜனாதிபதி அவரிடம் கேட்டபோது அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.
ஆனால், அந்தச் செய்தி வெளிவந்த பின்னரே தெற்கு ஊடகவியலாளர்கள் அது குறித்த தமது புலனாய்வு வேலையைத் தொடங்கிய போதுதான் பல விடயங்கள்
வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
ரொஷானின் விருப்பத்தை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், அவரை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட அவருக்கு தான் சந்தர்ப்பம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அப்படி போட்டியிடுவதெனில் அதற்கு முன்னதாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நல்லது என்றும் அவரே ஆலோசனை சொன்னார் என்றும் அதனையடுத்தே அவர் தனது எதிர்ப்பை சாகலவுடன் நிறுத்திக்கொள்ளாமல், ரணில் மீதும் திருப்பியதாகவும் தெற்கு ஊடக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
ஆக, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை களம் இறக்கும் முடிவில்தான் சஜித் இருக்கிறார் என்பதை இந்த ஊடகரின் செய்தி வெளிப்படுத்தியிருக்கின்றது.
ஜே. வி. பி. தலைவர் அநுரகுமாரவுக்கே தெற்கில் ஆதரவு அதிகமாக இருக்கின்றது (அது அவர் ஜனாதிபதியாக போது மானதல்ல என்றாலும்) என்று
ஏற்கனவே சில மேற்குலக ஆதரவு என். ஜி. ஓக்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பது குறித்தும் இது மற்றைய அனைவரையும் ஓரணியில் இணைப்பதற்கான மேற்கின் முயற்சியாக இருக்கலாம் என்றும் முன்னர் இந்தப் பத்தியில் எழுதியது ஞாபகமிருக்கலாம்.
ஆனால், சஜித்தோ ரணிலுக்கு எதிராக பொதுவேட்பாளரை களமிறக்க – அது தான் அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டிருப்பது பல விடயங்களை வெளிச்சம்
போட வைத்திருக்கின்றது.
எது எப்படியோ, ரொஷான் தன்னை ஊழலுக்கு எதிரானவராக காட்டி நடத்திய ‘ஆட்டம்’ எதற்காக என்பது வெளிச்சத்துக்கு வந்ததால் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.
சஜித்தும்தான்.!

  • ஊர்க்குருவி.