இப்படியும் நடக்கிறது

0
129

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், தனது பிள்ளை கள் பாடசாலையில் பரீட்சை எழுதிவிட்டு எப்போது சித்தியடைந்தாலும் அதனை கண்டுகொள்ள மாட்டார். ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தமது பிள்ளைகளின் படங்களை போட்டு வாழ்த்தி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் இன்றைய காலத்தில் அவரின் நடவடிக்கை சற்று ஆச்சரியத்தைத் தரும். அதுவும் அவரின் பிள்ளைகள் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சாதனை செய்தபோதும் அவர் அதனைக் கண்டுகொண்டதில்லை. ஒருநாள் பொறுக்க முடியாமல் அவரை திட்டியும் விட்டேன்.
‘பிள்ளைகள் இப்படி சிறப்பாக பரீட்சை எழுதிவிட்டு சாதனையோடு வருகின்றபோது நீர் மகிழ்ச்சியடைவதில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘பிள்ளைகள் அப்படி பாஸ் பண்ணுவார்கள் என்பது எனக்கு முதலே தெரிந்தது தான். அவர்கள் அப்படி பாஸ் பண்ணவில்லை என்றால்தான் எனக்கு அது ஆச்சரியம். அப்படி நடந்தால் அதனைப் பற்றி பேசியிருப்பேன்’ என்றார்.
அவர் இவ்வாறு பதிலளித்ததுதான், இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. நேற்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் நடைபெற்ற தமிழ் அரசு கட்சியின் வழக்கு எப்படி முடிவடைந்தது என்பதை ஒரு நண்பரிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில்தான் எனக்கு மேலே சொன்ன கதையை ஞாபகப்படுத்தியது. ‘அது தெரிந்ததுதானே. வழக்கு விரைவில் முடிய வேண்டும் என்று கட்சிக்காரர்களுக்கே அக்கறையில் லாதபோது நீர் எதற்கு அவ்வளவு அக்கறையுடன் விசாரிக்கிறீர்? வழக்கு இப்படித்தான் முடியும் என்பது உமக்குத் தெரியாதா?’ என்றார் நண்பர்.
உண்மைதான். வழக்கு விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்து கட்சி மட்டத்தில் விவாதித்து முடிவெடுப்பதற்காக கடந்த பத்தொன்ப தாம் திகதி தமிழ் அரசின் மத்திய செயல்குழு கூடவிருந்தது. பின்னர் அன்னை பூபதியின் நினைவு தினம் என்பதால் அதனை ஒத்திவைத்தார்கள்.
உண்மையாகவே, கூட்டம் கூடி அந்தப் பிரச்னை பற்றி முடிவெடுக்கவேண்டும் என்று கட்சிக்காரர்கள் நினைத்திருந்தால், அன்றைய தினம் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அந்த கூட்ட மண்டபத்திலேயே அன்னை பூபதியின் படம் ஒன்றை வைத்து அவர்களும் அஞ்சலி செலுத்திவிட்டுக் கூட்டத்தை நடத்தியிருக்கலாம். பின்னர், கூட்டம் இருபத்தி மூன்றாம் திகதி நடக்கும் என்றார்கள். அதுபற்றிய அறிவிப்புக்களும் ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டன. அதிகம் ஏன்? – ஒரு பேட்டி ஒன்றில், தமிழ் பொதுவேட்பாளர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழ் அரசின் எம். பி. ஒருவர், இருபத்தி மூன்றாம் திகதி தமது கட்சியின் மத்திய செயல்குழு கூடுகின்றபோது அதுபற்றி கட்சி மட்டத்தில் பேசி முடிவெடுக்கப் படும் என்று கூறியிருந்தார். அதாவது, இருபத்தி மூன்றாம் திகதி தமிழ் அரசின் மத்திய செயல்குழு கூடவிருக்கின்றது என்று கூறியிருந்தார்.
ஆனால், இருபத்தி மூன்றாம் திகதி அப்படியொரு கூட்டமே நடக்கவில்லை. கூட்டம் குறித்து தகவல்களை அறிவதற்காக பலரிடம் தொடர்பு கொண்டபோதுதான், அப்படியொரு கூட்டம் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. அதுவல்ல, முக்கியமானது, அப்படியொரு கூட்டம் நடக்கவிருப் பதாகத் தமக்கு கட்சியிலிருந்து தெரியப்படுத்தப்படவில்லையே என்றார்கள் பலர். ஆனால், கூட்டம் அன்று நடக்கவிருக்கின்றது என்று பல ஊடகங்கள் செய்திவெளியிட்டபோதி லும்கூட, கட்சியின் முக்கியஸ்தர்கள் எவருமே அந்த ஊடகங்களுடன் தொடர்புகொண்டு அப்படியொரு கூட்டம் நடப்பதாக இல்லையே என்று திருத்தம் செய்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை. இதுதான் நமது தமிழ் அரசு கட்சியின் இன்றைய இலட்சணம். இத்தனைக்கும், தாங்கள்தான் தமிழ் மக்கள் தரப்பில் அரசியல் முடிவுகளை செய்யக்கூடிய சக்தியுடன் இருப்பவர்கள் என்றும், அதிலும் தாமே இன்னமும் கட்சி முடிவுகளை எடுக்கின்ற நிலையில் இருப்பவர் கள் என்றும் தெற்கில் ஆங்கில ஊடகங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றனர் சில கட்சிக்காரர்கள்.

  • ஊர்க்குருவி.