இப்படியும் நடக்கிறது…!

0
192

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்னை பொதுஜன பெரமுனவை சமாளிப்பதுதான் என்பது ஆய்வுக்குரியதல்ல.
பாராளுமன்றில் ஒரேயோர் உறுப்பினரைக் கொண்டிருக்கின்ற அவரால் பொதுஜன முன்னணியின் ஆதரவு- ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி செய்வதென்பது முடியாத காரியம் என்பதும் இரகசியமானதல்ல.
சர்வகட்சி அரசாங்கம் என்ற பெயரில் எதிர்க்கட்சியையும் மற்றும் எல்லாக்கட்சிகளையும் சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர் நினைப்பதும், அதற்காக அவர் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பதுமே அமைச்சரவையைப் புதிதாக நியமிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றது.
அவரை நம்பி, சர்வகட்சி ஆட்சியில் சேர்வதற்கு சஜித் பிரேமதாஸ தயாராக இல்லை.
அதற்குக் காரணமும் கண்டறிய வேண்டியதில்லை.
இரண்டாயிரத்து பதினைந்து ஜனாதிபதி தேர்தலில் தான் வேட்பாளரானால் வெற்றிபெற முடியாது என்பதால், மைத்திரியை இழுத்துவந்து வேட்பாளராக்கி வெற்றிபெற்றபோதிலும்- அவர் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்துவிட்டபின்னரும்- அவரை எப்படியெல்லாம் நடத்தினார் என்பதும், அவரை எப்படி செல்லாக்காசாக மாற்றினார் என்பதையும் கூடவே இருந்து கவனித்து அறிந்து
கொண்டவர் சஜித் பிரேமதாஸ.
அவர் ரணிலை நம்பி சர்வகட்சியில் இணைந்துகொள்ளப் போவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியை செல்லாக் காசாக்கியவர் சஜித் என்பதும் அந்த கோபம் ரணிலுக்கு இருக்கும் என்பதும் தெரிந்ததே.
அவர் குறி முழுவதும் இப்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படி அவரை ஓரம்கட்டலாம் என்பதும் ஐக்கிய தேசியக் கட்சியை எப்படி மீண்டும் தூக்கி நிமிர்த்தலாம் என்பதிலுமே இருக்கும் என்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே.
இதனால்தான் அடுத்த இரண்டரை வருடங்களும் எதிர்க் கட்சியில் அமர்ந்திருக்க விரும்பாத சஜித்தின் சகாக்களை பதவியைக் காட்டிப் பேரம்பேசி அவரின் கட்சியிலிருந்து வெளியே இழுத்தெடுக்க முயன்று கொண்டிருக்கின்றார்.
இன்றைய திகதிக்கு, பதினாறுக்கும் அதிகமானவர்கள் அரசுடன் இணைந்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கின்றனர் என்கின்றது கொழும்புச் செய்தி ஒன்று.
அப்படி பதினாறு பேர் எதிரணியிலிருந்து வந்தாலும், ரணிலைப் பொறுத்தவரை சுமுகமான ஆட்சியை வழங்கவேண்டும் எனில், பொதுஜன பெரமுனவின் தயவு இல்லாமல் அது சாத்தியமாகப் போவதில்லை.
பல தடவைகள் பொதுஜன பெரமுன கட்சிக்காரரை, ஆளும்கட்சி என்ற கோதாவில் அவர்களின் உறுப்பினர்களை அவ்வப்போது சந்தித்து வரும் ரணில், அவர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திப்பது பயனற்றது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றராம்.
கடைசியாக நடைபெற்ற ஆளும்கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் ரணில் வழக்கம்போல மிக மகிழ்ச்சியாகவும் சிநேகபூர்வமாகவும் உரையாடிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அவர் ஒவ்வோர் உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட வகையில் சில கேள்விகளைக் கேட்கின்றபோதெல்லாம் அங்கிருந்த ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் முந்திக் கொண்டு, தானே அவர்களுக்காகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாராம்.
இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான ரணில், சினந்துகொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினாரென கொழும்பு சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று தனது பத்தி ஒன்றில் எழுதியிருக்கின்றது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி ரணில் பொதுஜன பெரமுனவினரை இப்போது தனித்தனியாக சந்திக்கத் தொடங்கியிருக்கின்றாராம்.
இவ்வாறு சந்திப்பதன் மூலம் பொதுஜன பெரமுனவுக்கு உள்ளேயே தனக்கு ஆதரவானவர்கள் என்று சிலரை அடையாளம் கண்டு அவர்களை அரவணைக்க முடிவெடுத்திருக்கின்றார் என்கின்றது அந்தப் பத்தி.
அதனால் இப்போது, தமது கட்சியினர் எவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்திக்கக்கூடாது என்றும், அவரைச் சந்திப்பதெனில் கட்சியின் அனுமதியைப் பெற்று கட்சி ரீதியிலேயே சந்திக்கவேண்டும் எனவும் கண்டிப்பான உத்தரவை வழங்கியிருக்கின்றதாம் பெரமுன நிர்வாகம்.
பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தேர்தல் நடை பெற்ற ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதிக்கு இருந்தது.
அதனை நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்கமுடியும் என்று பத்தொன்பதாவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதனை இரண்டரை வருடங்களில் கலைக்கலாம் என்று இருபதாவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிடும்.
வரவிருக்கும் இருபத்தி இரண்டாவது திருத்தத்தில் அதனை மீண்டும் நான்கரை வருடங்களாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதிலும்கூட ரணில் அதற்கு உடன்படவில்லையாம்.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தன் கைகளுக்கு வரும்வரை காத்திருக்கின்றாராம் ரணில்.
உடனடியாக தேர்தல் ஒன்றை சந்திக்க விரும்பாத பொதுஜன பெரமுனகாரர்களை அதன்பின்னர் வழிக்கு கொண்டுவரலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜனாதிபதி ரணில்!

  • ஊர்க்குருவி