ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனத் தெரிவித்து பொலிசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 154 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதோடு அரசிற்கெதிரான போராட்டம் தீவிரமடைந்த சூழ்நிலையில் சனந்தஜ் மற்றும் சாக்கிஜ் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவப் படைகள் களமிறங்கியுள்ள நிலையில் இதில், சனந்தஜ் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காரில் பயணித்த ஓட்டுநர் ஒருவர் பலியாகியுள்ளதோடு சாக்கிஜ் நகரில் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ஆசிரியர்கள் காயமடைந்துள்ளதாக ஈரான் நாட்டு ஹெங்காவ் என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் காவற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு போராட்டக்காரரின் வயிற்றில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார். ஈரானின் சாக்கிஜ், திவாந்தரெ, மகபத் மற்றும் சனந்தஜ் ஆகிய நகரங்களில் பரவலாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது என ஹெங்காவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 154 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்றே ஈரானிய அரசு தொடர்புடைய ஊடகங்கள் தகவல் குறிப்பிட்டு வருகின்றன.