உண்மை கண்டறிவை மறுக்கும் அரசு!

0
9

போர் காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரிக்கும் பணிகளும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இந்த செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் என்ற அரசாங்கத்தின் கூற்றை முற்று முழுவதுமாக நிராகரிக்கிறோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

மேலும், உண்மையாக என்ன நடந்தது என்பதை அறிவதில் தமக்கு ஆர்வம் இல்லை அல்லது அதனை மூடிமறைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே இந்த புதிய அரசாங்கம் செயற்படுகிறது.

உண்மையாக நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் இந்த செயற்பாடு தமிழ் மக்களுடைய அபிலாஷையை மூடி மறைப்பதாக இருக்கிறது. சர்வதேச ஈடுபாட்டுடனேயே உண்மையைக் கண்டறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 58ஆவது கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் (பெப்ரவரி 25ஆம் திகதி) இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றியிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கை பிரதிநிதி இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

இவ்விரு அறிக்கைகளையும் பார்க்கும்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகளுக்கு தடைசெய்யும் வகையிலான கூற்றுக்கள் வெளியாகியுள்ளன.

2015ஆம் ஆண்டு மங்கள சமரவீர வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது மாத்திரமே இந்த செயற்பாடுகள் விதிவிலக்காக அமைந்திருந்தது. இலங்கையின் இணை அனுசரனையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

30/1 என்ற தீர்மானத்தை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்திருந்த நிலையில், நல்லிணக்கம் தொடர்பான பல விடயங்களை விஜித ஹேரத் கூறியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையுடன் நாங்கள் இணங்கி செயற்படுவோம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவலகம் போன்ற மூன்று நிறுவனங்களையும் பலப்படுத்தி அதன் மூலமாகவும் நல்லிணக்க பொறிமுறையினூடாகவும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் கூறியிருக்கிறார்.

மீள நிகழாமைக்கான உத்தரவாதமென்று, 2015ஆம் ஆண்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருந்தார். அது புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயமாகும். அதாவது தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவோம் என்று கூறியிருந்தார். இந்த அரசாங்கமும் ஆட்சியை ஏற்பதற்கு முன்னரே புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் என்று மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்கள். ஆனால் இந்த கூட்டத்தொடரில் அதைப் பற்றி எதனையும் கூறவில்லை.

மாறாக, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் இவர்கள் கூறும் நிறுவனங்களுக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பேச்சளவில் இருந்தால் மாத்திரம் போதாது. நிதி ஒதுக்கீட்டின்மூலமே இவர்கள் உண்மையாகவே செய்கிறார்களா இல்லையா என்பது தெரியவரும். இந்த மூன்று நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடு போதுமானளவு வழங்கப்படவும் இல்லை.

இதற்கு மேலதிகமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி, தற்போது அந்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக வேறொரு சட்டத்தை இயற்றப்போவதாக கூறுகிறார்கள். இவர்களே கடந்த காலங்களில் எந்தவிதமான மாற்றீடையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்தார்கள். ஆனால் தற்போது அதனை மாற்றியமைத்து வேறு விதமாக கூறுகிறார்கள்.

சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது மிகவும் முக்கியமான விடயமாகும். அதாவது போர் காலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறிய செயற்பாடுகள் தொடர்பாக இலங்கையில் இதுவரையில் 15 வருடங்களாகியும் எதுவும் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சாட்சியங்களை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்ற மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமைவாக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதனை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நேற்று (நேற்று முன்தினம்) அறிவிக்கப் பட்டுள்ளது.

இது மிகவும் மோசமான அறிவிப்பாகும். நடந்த உண்மைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன உண்மையாக நடந்தது என்பதை அறிவதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை அல்லது அதனை மூடிமறைக்க வேண்டும் என்ற தோரணையில் இந்த புதிய அரசாங்கம் செயற்படுகிறது.

உண்மையாக நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்படவேண்டும். உண்மையை மறைத்து எங்கேயும் எப்போதும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. புதிய அரசாங்கம் தங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் ஆணை இருக்கிறது என்று கூறுகிறார்கள். அப்படிச் சொல்லிக்கொண்டு, வடக்கு கிழக்கு மக்களுடைய மிகவும் முக்கிய கோரிக்கையாகவும் பொறுப்புக்கூறல் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றி அதற்கான சாட்சியங்களை சேகரிக்கும் பணிகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த செயற்பாடுகளுக்கு தாங்கள் எதிரானவர் என்ற அரசாங்கத்தின் கூற்றை நாங்கள் முற்று முழுவது மாக நிராகரிக்கிறோம்.

அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடு தமிழ் மக்களுடைய அபிலாஷையை மூடி மறைப்பதாக இருக்கிறது. வடக்கு கிழக்கு தமிழ் மக்களும் கூட இதனை செவிமடுக்க வேண்டும். மக்கள் கோரிக்கை விடுக்கும் உண்மையை கண்டறியும் விடயத்தைக் கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், தேசிய நிறுவனங்களினூடாகவே அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள். உள்நாட்டு பொறிமுறை எதிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை, அக்கறையில்லை என்று மக்கள் பல முறை கூறியிருக்கிறார்கள். சர்வதேச ஈடுபாட்டுடனேயே உண்மையை கண்டறியும் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை எதிர்ப்பதாக இந்த அரசாங்கம் அறிவித்திருக்கிறது. போர் காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பில் உண்மையை கண்டறியும் பொறிமுறையின் அடிப்படையில் உண்மைகளை சேகரிக்கும் முடிவை நிராகரிப்பதாக இந்த அரசாங்கம் அறிவித்துள்ளதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் இந்த போக்கை கண்டிக்கிறோம். மக்களும் எச்சரிக்கையாக கூறுகிறோம். தொடர்ச்சியாக இவர்களுக்கு வாக்களித்து மக்கள் அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை நீர்த்துபோக செய்துவிடக் கூடாது என்றார்.