ஸிம்பாப்வேயில் ஞாயிற்றுக்கிழமை (18) ஆரம்பமான ஐசிசி உலகக் கிண்ண ஏ குழுவுக்கான தகுதிகாண் கிரிக்கெட் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்காவையும் நேபாளத்தையும் முறையே மேற்கிந்தியத் தீவுகளும் ஸிம்பாப்வேயும் வெற்றிகொண்டன.
ஆனால், ஐக்கிய அமெரிக்காவும் நேபாளமும் 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து எதிர்காலத்தில் சிறந்த அணிகளாக தங்களால் முன்னேற முடியும் என்பதை உணர்த்தின.
ஹராரே, ஹைபீல்ட் டக்காஷிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 39 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிகொண்டது.
ஆனால் அப் போட்டியில் அமெரிக்கா சார்பாக ஆட்டம் இழக்காமல் சதம் குவித்த கஜானந்த் சிங் முழு கிரிக்கெட் உலகையும் கவர்ந்தார்.
முதல் இரண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடி 49.3 ஓவர்களில் சகல விககெட்களையும் இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய ஐக்கிய அமெரிக்கா, அவ்வணியை 50 ஓவர்களுக்குள் சகல விக்கெட்களையும் இழக்கச் செய்ததுடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது 250க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தியது.
அப் போட்டியில் ஆரம்ப வீரர்களான ப்றண்டன் கிங் (0), கய்ல் மேயர்ஸ் (2) ஆகிய இருவரையும் இழந்தபோது மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 6ஆவது ஓவரில் 14 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், நான்கு துடுப்பாட்ட வீரர்கள் அரைச் சதங்கள் குவித்து மேற்கிந்தியத் தீவுகள் கணிசமான மொத்த ஓட்டங்களைப் பெற உதவினர்.
ஜோன்சன் சார்ள்ஸ் (7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 66), ஷாய் ஹோப் (6 பவுண்டறிகள். ஒரு சிக்ஸுடன் 54), ரொஸ்டன் சேஸ் (4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 55), ஜேசன் ஹோல்டர் (2 பவண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 56) ஆகியோர் அரைச் சதங்கள் குவித்தனர்.
அத்துடன் நிக்கலஸ் பூரன் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
ஜோன்சன் சார்ள்ஸ், ஷாய் ஹோப் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 115 ஓட்டங்களையும் நிக்கலஸ் பூரண், ரொஸ்டன் சேஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களையும் ரொஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
அமெரிக்க பந்துவீச்சில் ஸ்டீவன் டெய்லர் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சௌராப் நேத்ராவோல்கர் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும கய்ல் பிலிப் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட்ளை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.
21ஆவது ஓவரில் அமெரிக்காவின் 5ஆவது விக்கெட் வீழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 97 ஓட்டங்களாக இருந்தது.
எனினும், கஜானந்த் சிங் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 109 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 108 ஓட்டங்களைக் குவித்து அணியை கௌரவமான நிலையில் இட்டார்.
ஷயன் ஜஹங்கிருடன் 6ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களையும் நொஸ்துஷ் கெஞ்சிகேயுடன் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் கஜானந்த் சிங் பகிர்ந்தார்.
ஷயன் ஜஹங்கிர் 39 ஓட்டங்களையும் நொஸ்துஷ் கெஞ்சிகே ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கய்ல் மேயர்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜேசன் ஹோல்டர்.
ஸிம்பாப்வேக்கு இலகுவான வெற்றி
ஐசிசி உலகக் கிண்ண தகுதி சுற்றுக்கான முதலாவது போட்டியில் அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின், சோன் வில்லியம்ஸ் ஆகிய இருவர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றிகொண்டது.
எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் நேபாளம் 290 ஓட்டங்களைக் குவித்தது பாராட்டுக்குரியதாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நேபாளம் 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களான குஷல் புர்டெல் (13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 99), ஆசிப் ஷெய்க் (7 பவுண்டறிகளுடன் 66) ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 171 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நேபாள ஜோடி ஒன்று பகிர்ந்த சகல விக்கெட்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.
தொடர்ந்து குஷால் மல்லா (41), ரோஹித் பௌடெல் (31) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து நேபாளத்தை மேலும் பலப்படுத்தினர்.
பந்துவீச்சில் ரிச்சர்ட் எங்கராவா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வெலிங்டன் மஸக்கட்ஸா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 44.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 291 ஓட்டங்களைக் குவித்து 8 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
ஆரம்ப வீரர் ஜொய்லோட் கும்பி (25) ஆட்டம் இழந்த பின்னர் 2ஆவது விக்கெட்டில் க்றெய்க் ஏர்வின், வெஸ்லி மதேவியர் (32) ஆகிய இருவரும் 82 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். (127 – 2 விக்.)
அதனைத் தொடர்ந்து ஏர்வினும் சோன் வில்லியம்ஸும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 164 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.
க்ரெய்க் ஏர்வின் 128 பந்துகளில் 15 பவுண்டறிகள், 1 ஒரு சிக்ஸ் உட்பட 121 ஓட்டங்களுடனும் சோன் வில்லியம்ஸ் 70 பந்துகளில் 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 102 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஆட்டநாயகன்: க்ரெய்க் ஏர்வின்.