உலகக்கிண்ண கால்பந்து: ஆர்ஜென்டீன, குரோசிய அணிகள் அரையிறுதியில்!

0
156

உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெற்றுவருகிறது. கட்டாரின் லுசைல் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய காலிறுதிச்சுற்றில் ஆர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்ட நேர முடிவின்போது இரண்டு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தமையால், வெற்றியைத் தீர்மானிக்க சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. சமனிலை தவிர்ப்பு உதை மூலம் 4-3 என்ற கோல் கணக்கில், நெதர்லாந்தை வீழ்த்திய ஆர்ஜன்டினா, அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதேவேளை, மற்றுமொரு போட்டியில் 5 முறை உலகக் கிண்ண கால்பந்து கிண்ணத்தைச் சுவீகரித்த பிரேசில், குரோஷியாவுடன் மோதியது. போட்டியின் 105-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், கோல் ஒன்றை பதிவு செய்தார். பிரேசிலுக்குப் பதிலடி வழங்கும் வகையில், 116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. வெற்றியைத் தீர்மானிக்க சமனிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது. சமனிலை தவிர்ப்பு உதையில், 4-2 என்ற கோல் கணக்கில், கால்பந்தாட்டத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரேசிலை, தரவரிசையில் 12வது இடத்திலிருக்கும் குரோசிய அணி வெற்றியீட்டி, அரையிறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. 5 முறை கால்பந்தாட்டக் கிண்ணத்தை வெற்றியீட்டிய பிரேசில், அதிர்ச்சித் தோல்வியுடன், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.