அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புப் பிரிவு மற்றும் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த ஆபத்து குறைப்பு விழிப்புணர்வு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரின் வரவேற்புரையினைத் தொடர்ந்து வேல்ட்விஷன் நிறுவன திட்ட முகாமையாளர் ஏ.ஜி.றொசைறோ நிதி அனுசரணையாளர் உரையினையும் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய பயிற்சி மற்றும் விழிப்பூட்டல் பிரிவு பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க செயலமர்வின் நோக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கினர். தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபரால் அனர்த்த முன்னாயத்தங்களும் தயார்ப்படுத்தல்களும் எனும் தொனிப்பொருளிலான உரை நிகழ்த்தப்பட்டது. ‘இலங்கையின் அனர்த்த அபாய குறைப்பு முறையின் சட்ட ஏற்பாடுகள்’ தொடர்பில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய பயிற்சி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸாநாயக்கவும், ‘முல்லைத்தீவு மாவட்டத்தின் அறிமுகம் மற்றும் இடர்களும் முன்னேற்பாடுகளும்’ எனும் தலைப்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளரும், ‘காலநிலை மாற்றத்துடன் கூடிய அனர்த்தங்கள்’ எனும் தலைப்பில் வளிமண்டலவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் டுலாரி பெர்ணாண்டோவும், ‘அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்த நிலத்தடி நீர் தேக்கமும் வெள்ளக் கட்டுப்பாடும்’ எனும் தலைப்பில் நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளரும், ‘மனித மற்றும் யானை மோதல்கள்’ எனும் தலைப்பில் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் பி.கேதாரநாதனும், ‘ஊடகவியலாளர்களின் வகிபாகமும் பொறுப்புக்களும்’ எனும் தலைப்பில் கொழும்பு அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி ஊடகப் பணிப்பாளர் ஜானக்க கண்டுபதிராஜாவும் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், யாழ் பல்கலைக் கழக ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.