எதிர்பார்த்த மீன்பாடு கிடைக்காததால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை!

0
75

மீன்பிடி தடை காலம் 60 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற இந்தியா – ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன் பாடுகள் கிடைக்கவில்லை.
மேலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையடுத்து ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, திருவாடானை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்று இன்று அதிகாலை கரை திரும்பினர்.

எதிர்பார்த்தளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
மீன்பிடி தடை காலங்களில் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தும் நாட்டுப்படகுகளுக்கும் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அதே போல் தற்போது மீனவர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை கிடைக்க உடனடி எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.